விஜய்யின் வாரிசு படத்தில் என்ன ரோல்... சீக்ரெட் தகவலை வெளியிட்ட குஷ்பு
வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்தும், அப்படத்தில் தனக்கு என்ன ரோல் என்பது குறித்தும் நடிகை குஷ்பு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு புகைப்படம் வெளியானது அதில் நடிகை குஷ்புவும் இடம்பெற்று இருந்ததால் அவர் இப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் அந்த செய்திகளை மறுத்து குஷ்பு தான் அப்படத்தில் நடிக்கவில்லை என்பதுபோல் தெரிவித்திருந்தார். ஆனால் அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக சில புகைப்படங்களை வெளியிட்டனர்.
அதில் நடிகை குஷ்பு மற்றும் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா செல்பி எடுத்த புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. அந்த புகைப்படத்தை பதிவிட்டு தான் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளதாக குஷ்பு தெரிவித்தார். முதலில் நடிக்கவில்லை என சொல்லிவிட்டு பின்னர் நடித்துள்ளதாக குஷ்பு ஏன் சொன்னார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இதற்கு குஷ்புவே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது : வாரிசு படத்தை பற்றி நான் பேசாததற்கு காரணம் அப்படத்தில் நான் நடிப்பது குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிப்பு வரட்டும் என்பதற்காக தான். அதனால் தான் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தேன். வாரிசு படத்துல நான் ஒரு கேமியோ ரோல்ல தான் நடிக்கிறேன்.
இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட ஸ்டில்ஸ்... ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்யின் மாஸ் லுக் போட்டோஸ் இதோ
அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளிவந்தபோதுகூட நான் இயக்குனர் வம்சிக்கு போன் போட்டு கேட்டேன். அவர் தாங்கள் தான் கொடுத்ததாக தெரிவித்ததை அடுத்து சரி இனிமேல் மறைத்து வைக்க வேண்டாம் என அப்படம் பற்றி பேசத் தொடங்கினேன். படக்குழு என்னுடைய ரோலை ரொம்ப சீக்ரெட்டாக வைத்திருந்தார்கள். அதனால் தான் இப்படி செய்தேன்.
என்னுடைய ரோல் ரொம்ப சின்னது தான், ஆனா முக்கியமான கேரக்டர். அந்த படத்துக்காக எவ்வளவு நாள் ஷூட்டிங் சென்றேனோ அத்தனை நாளும் எனக்கும், விஜய்க்கும் காட்சிகள் இருக்கும். படத்துல என்னுடைய காம்பினேஷன் முழுக்க விஜய் உடன் தான். அவருடன் பணியாற்றும்போது ரொம்ப ஜாலியாக இருந்தது.
பொதுவாக நான் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த படத்தின் ஷூட்டிங்கிற்கும் செல்ல மாட்டேன். இது அனைவருக்குமே தெரியும். ஆனால் முதன்முதலில் நான் ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங்குக்கு சென்ற படம் வில்லு. அதில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். பிரபுதேவா மற்றும் விஜய் கேட்டுக்கொண்டதால் ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங்குக்கு ஒப்புக்கொண்டேன். அதன்பின் தற்போது வாரிசு படத்திலும் ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங்கில் பங்கேற்றேன். இதற்கும் வரமாட்டேன் என்று சொன்னேன். வம்சி தான் போன் பண்ணி ப்ளீஸ் வந்துடுங்கனு கேட்டார். அதனால் சென்றேன். மொத்தத்தில் வாரிசு நல்ல அனுபவமாக இருந்தது” என குஷ்பு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... ரஜினியின் 2 படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானைவிட அதிக சம்பளம் கேட்ட அனிருத்... ஜெர்க் ஆன லைகா..!