விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில்... பெயரில் மாற்றம் செய்த நடிகை ஹன்சிகா!
Hansika Changes Her Name: நடிகை ஹன்சிகா கணவர் சோஹைல் கத்தூரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது தன்னுடைய பெயரிலும் மாற்றம் செய்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா:
ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. பாலிவுட் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால், தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய போது தான், தெலுங்கு படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய முதல் படத்திலேயே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து ஹிந்தி, கன்னடம் ஆகியோர் மொழிகளில் ஹீரோயினாக நடித்தார்.
தனுஷுக்கு ஜோடி:
தெலுங்கில், அடுத்தடுத்து இளம் நடிகர்களுக்கு ஜோடி போட்டு வந்த இவரை... தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சுராஜ். தனுஷை வைத்து தான் இயக்கிய, 'மாப்பிள்ளை ' படத்தில் நடிக்க வைத்தார். முதல் தமிழ் படத்திலேயே தன்னுடைய கொழுக்கு மொழுக்கு அழகால் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். ரசிகர்களும் இவரை குட்டி குஷ்பூ என வர்ணித்தனர். இந்த படத்தை தொடர்ந்து, ரவி மோகனுக்கு ஜோடியாக 'எங்கேயும் எப்போதும்', விஜய்யுடன் 'வேலாயுதம்', என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
சிம்புவுடன் காதல்:
முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வந்த போதே, நடிகர் சிம்புவை காதலிப்பதாக இருவரும் அறிவித்த நிலையில், திருமணமும் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 மாதத்திலேயே இவர்களின் காதல் பிரேக்கப்பில் முடிந்தது அதிர்ச்சியின் உச்சம். காதல் தோல்வியில் இருந்து மீண்டு... மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வந்தார் ஹன்சிகா.
தோழியின் முன்னாள் கணவருடன் திருமணம்:
இந்த நிலையில் தான் சில வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய தோழியின் முன்னாள் கணவரும், தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியாவுடன் காதல் வலையில் விழுந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து சர்ச்சை:
இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் கூட ஆகாத நிலையில், சோஹைல் கத்தூரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம் வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ஹன்சிகா தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டார். இருவரும் விநாயகர் சதூர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளை தனியாகவே கொண்டாடியதாக கூறப்படுகிறது.
ஹன்சிகா பெயரில் ஏற்பட்ட மாற்றம்:
ஹன்சிகாவின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, ஹன்சிகா திடீர் என தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். அதாவது, ஆங்கிலத்தில் "Motwani" என்பதை தற்போது "Motwanni" என மாற்றம் செய்து இருக்கிறார். இந்த மற்றம் ஏன் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், நியூமராலஜியா படி தன்னுடைய பெயரை மாற்றி இருக்கலாம் என சிலர் தங்களின் கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.