- Home
- Cinema
- Vivek : மகன் இறந்த பின் இரட்டைக் குழந்தைகள் பெற்று வெளியுலகத்துக்கே காட்டாமல் வளர்த்த விவேக்!
Vivek : மகன் இறந்த பின் இரட்டைக் குழந்தைகள் பெற்று வெளியுலகத்துக்கே காட்டாமல் வளர்த்த விவேக்!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவர் வெளியுலகுக்கு காட்டாமல் வளர்த்த இரட்டைக் குழந்தைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Actor Vivek Twin Babies
தமிழ் சினிமாவில் கோலோச்சிய காமெடி நடிகர்கள் வெகு சிலரே. அந்த பட்டியலை புரட்டிப் பார்த்தால் அதில் நடிகர் விவேக்கிற்கு எப்போதுமே மக்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் பிறரை உருவகேலி செய்வதும், இழிவுபடுத்துவதையும் காமெடி என செய்து வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தத்துவத்துடனும், மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் காமெடி செய்தவர் என்றால் அது விவேக் மட்டும் தான். அவருக்கு பின்னர் அதுபோன்ற காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கவில்லை.
விவேக்கின் எதிர்பாரா மரணம்
நடிகர் விவேக்கை திரையுலகில் அறிமுகப்படுத்தியது கே.பாலச்சந்தர் தான். மனதில் உறுதி வேண்டும் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த விவேக். சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். தமிழில் விஜய், அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த விவேக், பல வருடங்களாக கமல்ஹாசன் உடன் மட்டும் இணைந்து நடிக்காமல் இருந்து வந்தார். அவரின் அந்த ஆசை இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது. இருந்தாலும் அதை திரையில் பார்க்க விவேக் உயிருடன் இல்லை. இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகும் முன்னரே விவேக் இறந்துவிட்டார்.
நடிகர் விவேக் பேமிலி
நடிகர் விவேக் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் அதற்கான விழிப்புணர்வு செய்து வந்த விவேக் திடீரென உயிரிழந்தது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்பட்டது. நடிகர் விவேக்கிற்கு அருள் செல்வி என்கிற மனைவி இருக்கிறார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருப்பது தான் வெளியுலகுக்கு தெரிந்தவை.
விவேக்கின் இரட்டைக் குழந்தைகள்
அதிலும் விவேக்கின் மகன் பிரசன்னா, உடல்நலக்குறைவால் கடந்த 2015-ம் ஆண்டு மரணமடைந்தார். மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த விவேக், அவரின் மறைவுக்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். மகனின் மறைவுக்கு பின் நடிகர் விவேக் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றுக்கொண்டாராம். அவர் இறக்கும் வரை அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருக்கும் தகவலை வெளியுலகுக்கு சொன்னதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது தான் விவேக்கின் மனைவி இந்த தகவலை வெளியிட்டார்.
மகள்களுக்கு விவேக் வைத்த பெயர்
விவேக்கின் மூத்த மகள்களின் பெயர் அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வினி. இதுதவிர கடந்த 2017-ம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பிறந்து நான்கு மாதங்களாக பெயரே வைக்கப்படவில்லையாம். இதையடுத்து ஒருமுறை காஞ்சிபுரம் கோசாலைக்கு சென்றிருந்தபோது, அருகே இருந்த காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார் விவேக். அங்கு சில பெயர்கள் அடங்கிய சீட்டினை ஐய்யரிடம் கொடுத்து அம்மனின் பாதத்தில் போட்டு, அதில் இரண்டு பெயர்களை எடுத்து வர சொன்னாராம். அந்த இரண்டு சீட்டில் இருந்த பிரசாந்தினி, பிரார்த்தனா என்கிற பெயரை தான் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார் விவேக். அந்தக் குழந்தைகள் தற்போது இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்களாம்.