திருமண தேதி.. ரஜினிக்கு பாராட்டு விழா.. பிறந்தநாளில் அப்டேட்டுகளை அள்ளிக்கொடுத்த விஷால்
நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடினார். திருமணம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதாகவும், நடிகர் சங்கக் கட்டிடம் குறித்த தகவல்களை விரைவில் தெரிவிப்பதாகவும் கூறினார்.

தமிழ் திரைப்படத்துறையில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் விஷால் (வயது 48) தனது திருமணத்தை நீண்ட காலமாக தள்ளிவைத்து வந்தார். நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டி முடிவத வரை திருமணம் செய்யமாட்டேன் என்று 2016-ல் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த கட்டிடம் 9 ஆண்டுகளுக்கும் மேல் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டிடம் கட்டுமான பணியானது முடிவடையும் நிலையில் உள்ளது. இதனிடையே பல்வேறு நடிகைகளோடு கிசு கிசுக்கப்பட்ட நடிகர் விஷால், கடந்த மே மாதம் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார்.
சாய் தன்ஷிகாவின் படம் யோகி டா இசை வெளியீட்டு விழாவில் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். திருமண தேதி ஆகஸ்ட் 29, 2025 (இன்று) என்று உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடிகர் விஷால் தன்னுடைய 48 வது பிறந்தநாளை சென்னை கீழ்ப்பாக்கத்தில் மாதா தேவாலயத்தில் ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுடன் கொண்டாடினார். தேவலாயத்தில் பிராத்தனை நடத்தியும், முதியவர்களுக்கு காலை உணவு வழங்கியும் நடிகர் விஷால் பிறந்தநாள் கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்,48 வது பிறந்த நாளை கீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் முதியோர்களுக்கு உணவருந்தி கொண்டாடினோம். அப்பா அம்மா வீடு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருடா வருடம் இந்த முதியோர் இல்லத்தில் உணவு கொடுப்பதற்கு வருவேன் அந்த வகையில் இன்று முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டதாக தெரிவித்தார்.
தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடுவேன் என்று கூறிய கேள்விக்கு , தமிழ்நாட்டின் தாய்மார்களும் அம்மாக்களும் அப்பாக்களும் நான் எங்கு சென்றாலும் கேட்கும் கேள்வி உனக்கு எப்போது கல்யாணம் என்பது தான். இன்று இன்று மதியம் 12.30 மணியளவில் அதற்கான தகவலை வெளியிட இருப்பதாக கூறினார். என் திருமணம் இந்த வருடமே நடக்கும் என கூறினார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான பணி கடந்த 9 வருடமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதம்தான் பொறுமையாக இருந்தால் ஏன் தாமதம் எந்த மாதிரி கட்டிடம் கட்டுகிறோம் என்ற அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு மாதத்தில் தெரியவரும் என கூறினார். 9 வருடமாக ஒற்றுமையாக இருக்கிறோம். நல்லது செய்ய வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் 50ஆம் ஆண்டு பாராட்டு விழா தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு நடிகர் திரைத்துறையில் 50 வருடம் நீடித்து நடித்து வருகிறார் என்றால் உலக சாதனையாக தான் பார்க்கிறேன். நடிகர் ரஜினிகாந்திற்கு 50ஆம் ஆண்டு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக பரீசிலனை செய்து வருகிறோம் என கூறினார்.