அப்போ வர்மா, இப்போ வணங்கான்! பாலாவை பாதியில் கழட்டிவிட்ட ‘பிதாமகன்’கள்..!
பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் பாலா. இவர் கடந்த 1999-ம் ஆண்டு ரிலீசான சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் விக்ரமுக்கு சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் இது தான். இப்படம் தேசிய விருதை வென்றது.
இதையடுத்து சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார் பாலா. சூர்யாவின் கெரியரை திருப்பிபோட்ட படம் இது. இப்படத்தின் மூலம் அவரது முழு நடிப்பு திறமையையும் வெளிக்கொண்டு வந்திருந்தார் பாலா. இதையடுத்து சூர்யா, விக்ரம் இருவரையும் இணைத்து பிதாமகன் என்கிற படத்தை எடுத்தார் பாலா. இப்படத்திற்காக நடிகர் விக்ரம் தேசிய விருது பெற்றார்.
இவ்வாறு சூர்யாவும், விக்ரமும் இன்று தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக திகழ்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் பாலா தான். சமீப காலமாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக இவர் மலைபோல் நம்பி இருந்த சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரின் படங்களே இவருக்கு பெரும் தலைவலியாக மாறிப்போனது.
பாலா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் நாச்சியார். அப்படத்துக்கு பின்னர் நடிகர் விக்ரம், பாலாவை அணுகி தனது மகனுக்காக படம் பண்ணுமாரு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்து அதனை வர்மா என்கிற பெயரில் எடுத்தார் பாலா. படம் முழுவதும் முடிந்தபின் படத்தை பார்த்த விக்ரம் இது செட் ஆகாது எனக்கூறி அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என ஒதுக்கிவிட்டார். இதனால் அவருக்கும் பாலாவுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
தான் வளர்த்துவிட்ட ஹீரோ தனது படத்தை பிடிக்கவில்லை என சொன்னதால் கடும் அப்செட்டில் இருந்த பாலாவுக்கு சூர்யா வாய்ப்பளித்தார். இவர்கள் கூட்டணியில் வணங்கான் படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் இப்படம் ஷூட்டிங்கும் நடைபெற்றது. இதையடுத்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை ஏற்பட்டதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் சண்டையெல்லாம் எதுவும் இல்லை எனக்கூறி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார் சூர்யா.
ஆனால் அப்போது நிறுத்தப்பட்ட ஷூட்டிங் அதன்பின் தொடங்கப்படவே இல்லை. இடையே படத்தில் கதையை பாலா மாற்றி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... குயினாக வலம் வந்த குயின்ஸிக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்... அதுவும் எவ்வளவு தெரியுமா?
அதில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா.
இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே "வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.
அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. 'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இருவரும் மனக்கசப்பு இன்றி பிரிந்ததாக அறிக்கையில் பாலா குறிப்பிட்டு இருந்தாலும், தான் வளர்த்துவிட்ட ‘பிதாமகன்’கள் தன்னை அடுத்தடுத்த படங்களில் பாதியில் கழட்டிவிட்டது அவருக்கு சற்று மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லப்படுகிறது. சூர்யா விலகினாலும் வணங்கான் பணிகள் தொடரும் என பாலா சொல்லி உள்ளதால் அவர் அடுத்ததாக அதில் யாரை நடிக்க வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... நான் நடிக்கவே இல்ல.. ஏன் மூஞ்சிய எதுக்கு போஸ்டர்ல போடுற! தாதா படக்குழுவை திருப்பி அடிக்கும் யோகிபாபு