- Home
- Cinema
- மருத்துவமனையில் சிகிச்சை.. ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாரா சம்பவம்
மருத்துவமனையில் சிகிச்சை.. ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாரா சம்பவம்
நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Robo Shankar Hospitalised
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கியவர் தான் ரோபோ சங்கர். இதையடுத்து தனுஷின் மாரி படம் மூலம் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி கலக்கினார் ரோபோ சங்கர். அதன்பின்னர் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்ததால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு மஞ்சள் காமாலை வந்து படுத்த படுக்கையானார். அதுமட்டுமின்றி குடிக்கு அடிமையாகி இருந்ததால் அவர் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, மெலிந்து போனார்.
ரோபோ சங்கருக்கு மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் அதில் இருந்து மீண்டு வந்தார் ரோபோ சங்கர். தற்போது பழைய நிலைக்கு திரும்பி இருக்கும் அவர், சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு?
சென்னையில் சினிமா ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொண்டு நடித்து வந்திருக்கிறார் ரோபோ சங்கர். அப்போது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் பதறிப்போன படக்குழுவினர் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
ரோபோ சங்கர் பேமிலி
நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பெயர் பிரியங்கா. அவரும் சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தனம் சீரியலில் நடித்திருந்தார். இவர்களுக்கு இந்திரஜா என்கிற மகள் இருக்கிறார். அவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் ஆனது. கார்த்திக் என்பவரை காதலித்து கரம்பிடித்தார் இந்திரஜா. இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்திரஜாவும் சினிமாவில் விஜய்யுடன் பிகில், கார்த்தியின் விருமன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.