விரைவில் கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு டும்.. டும்.. டும்! திருமண தேதி குறித்து வெளியான மாஸ் தகவல்!
நடிகர் கௌதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இருவரும் சமீபத்தில் தங்களுடைய காதலை, ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த நிலையில்... விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாகவும், இவர்களுடைய திருமண தேதி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன், தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில்... நடிகர் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் நடித்து வெளியான முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த தமிழ் படங்களான 'சத்திரியன்', 'இப்படை வெல்லும்' போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து கவர்ச்சி காட்டாத வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த மஞ்சிமா மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு, வாரிசு நடிகர், கௌதம் கார்த்திக்கு ஜோடியாக 'தேவராட்டம்' படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசு வெளியாகி வந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தகவலை மறுத்து வந்த மஞ்சிமா மோகன், ஒருவழியாக... கடந்த மாதம் இருவரும் ஒரே மாதிரி உடையில் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு, காதலை உறுதி செய்தார்.
இதை தொடர்ந்து, விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இவர்களுடைய திருமண தேதி குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதாவது இந்த மாதம் 28 ஆம் தேதி கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோரும் முடிவு செய்துள்ளதாகவும், இவர்களுடைய திருமணத்தில் இருவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் குறித்து கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில்... விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.