திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மகன்களுடன் மொட்டை போட்டு... மனம் உருகி பிரார்த்தனை செய்த தனுஷ்!
நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்கள் மற்றும் பெற்றோருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து, வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சமீபத்தில் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமிருந்து விவாகரத்து பெற உள்ள தகவலை அறிவித்தார். தற்போது வரை இந்த தகவல் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிக்கு இதுவரை நீதிமன்றம் விவாகரத்து வழங்கவில்லை என கூறப்படுவதால், இவர்களை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் ஐஸ்வர்யா ஒரு பக்கம் தன்னுடைய படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வர, தனுஷும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது, நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வந்த 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் தாடி மீசையோடு இதுவரை எந்த ஒரு படத்திலும் தோன்றாத வேடத்தில் நடித்து வந்த நிலையில், தன்னுடைய காட்சிகள் முடிவடைந்த உடனேயே... திருப்பதி கோவிலுக்கு பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா - லிங்காவுடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார். இது குறித்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான, திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், 'கேப்டன் மில்லர்' படத்தை தொடர்ந்து, இயக்குனர் சேகர் காமுல்லா இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.