Dhanush new movie : தேடிவந்த பிரம்மாண்ட வாய்ப்பு.... அடுத்த புஷ்பா ஆகிறாரா தனுஷ்!! ஊ சொல்வாரா... ஊஊ சொல்வாரா?
கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், வாத்தி என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார்.
திரையுலகில் ஆல்ரவுண்டர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகர் தனுஷ். தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். அதே போல் நடிப்பு மட்டும் இன்றி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல விதத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
தமிழில் இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் வாத்தி என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகம் ஆகி உள்ளார்.
வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
இதையடுத்து தேசிய விருது வென்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்த பின் அவர் தனுஷ் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.