Ashwin Kumar : 40 கதைக்கே வச்சு செஞ்சாங்க... இப்போ இது வேறயா?.... புது சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்
கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்று சொல்லியதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட அஸ்வின், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
நடிகர் அஸ்வின் குமார் கடந்த 2015-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த தொடர் 99 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. போதிய வரவேற்பு இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நினைக்க தெரிந்த மனமே என்கிற தொடரில் நாயகனாக நடித்தார் அஸ்வின். அந்த தொடரும் 90 எபிசோடுகளில் மூடுவிழா கண்டது.
சின்னத்திரை செட் ஆகாததால், வெள்ளித்திரையில் நடிக்க முயற்சி செய்த அஸ்வினுக்கு மணிரத்னத்தின் ஓ காதல் கண்மனி மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறிய வேடம் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை மிகவும் பிரபலமாக்கியது. இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர் வட்டமும் பெரிதானது.
இந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்தார் அஸ்வின். அதுவரை சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த மாதம் நடந்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்தர்.
கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன், அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. அவரின் ஆணவப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். 40 கதையை கேட்டு தூங்கியதைப் போல் இந்த படத்தின் கதைக்கும் அவர் தூங்கி இருக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், நடிகர் அஸ்வின் குமார், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தான் இந்த புது சர்ச்சைக்கு காரணம். அதில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், “பழிவாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கிறது. எதுவா இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும்” என்ற வாசகம் இடம்பெற்று உள்ளது. அஸ்வினின் இந்த பதிவு எரியிற தீயில் எண்ணெயை ஊற்றுவதைபோல ஆகிவிட்டது. இதைவைத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.