S.J.Suryah : 54 வருஷமா முரட்டு சிங்கிளாக இருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம்..! பொண்ணு யார் தெரியுமா?
S.J.Suryah : தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, அஜித் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அஜித் நடித்த ஆசை மற்றும் உல்லாசம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, எஸ்.ஜே.சூர்யாவின் திறமையை பார்த்து வியந்து போன அஜித், அவருக்கு தனது வாலி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
முதல் படத்திலேயே நடிகர் அஜித்தை ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்க வைத்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, வாலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் எஸ்.ஜே.சூர்யா. அவரை வைத்து குஷி படத்தை இயக்கினார். இப்படம் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இவ்வாறு முதல் இரண்டு படத்திலேயே அஜித், விஜய் என இரண்டு முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றிகண்ட எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக இயக்கிய படம் நியூ. சயின்ஸ் பிக்சன் படமான இதில் அவரே நாயகனாகவும் நடித்து இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ஹிட்டானது. இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்பட்டது. இப்படத்திற்கு வரவேற்பும் கிடைத்தது.
இதையும் படியுங்கள்... உலக அளவில் 50 கோடி... அமெரிக்க பாக்ஸ் ஆபிஸியில் புதிய சாதனை படைத்த 'சீதா ராமம்' எவ்வளவு தெரியுமா?
இதையடுத்து அவர் இயக்கிய அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு முழு நேர நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதன்படி கல்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்த போது தான் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
அதுவரை ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவை, தனது ஸ்பைடர் படம் மூலம் வில்லனாக களமிறக்கினார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்ததால், அடுத்தடுத்து வில்லன் வாய்ப்பு குவிந்தது. அதன்படி விஜய்யின் மெர்சல், சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களில் இவரது வில்லன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
இவ்வாறு நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தற்போது 54 வயது ஆகிறது. இவ்வளவு வயது ஆகியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அவரது குடும்பத்தினர் தற்போது தீவிரமாக பெண் தேடி வருகிறார்களாம். விரைவில் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வீட்டை சுத்தி காட்டுறேன்னு கூட்டிட்டு போய் கற்பழித்தார்... பிரபல பாடகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்