ஷூட்டிங்கில் இருந்து திரும்பும் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் கேரவேன்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
பிரபல நடிகரின் சொகுசு கேரவேன் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அல வைகுண்ட புரம்லோ திரைப்படம் தெலுங்கு ரசிகர்களைக் கடந்து தமிழிலும் வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘புட்டபொம்மா’ பாடலும் டிக்-டாக், இன்ஸ்டாகிராம் என உலகம் முழுவதும் பிரபலமானது. இவருடைய அடுத்த படத்தைக் காண தமிழ் ரசிகர்கள் கூட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட புஷ்பா என்ற படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
முதலில் இந்த படத்தில் வனத்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆரம்பத்திலேயே அவர் இந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. தற்போது வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது புஷ்பா பட ஷூட்டிங் ஆந்திர மாநிலம் ரம்பச்சோதவரம் வனப்பகுதியில் நடைபெற்றது.
அப்போது ஷூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழு ஐதராபாத் திரும்பியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் சொகுசு ஃபால்கான் கேர்வேனில் அவருடைய மேக்கப் டீம் மற்றும் படக்குழுவினர் இருந்தனர்.
கம்மம் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது டிரைவர் திடீரென் பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷடவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அல்லு அர்ஜுனுக்கு என்ன ஆனதோ என கவலையடைந்தனர். ஆனால் தற்போதைய தகவலின் படி அல்லு அர்ஜுன் அந்த வேனில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.