- Home
- Business
- Tomato Price: இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் உயர்ந்த தக்காளி விலை.! இனி டோமோட்டோ சாஸ் கூட கிடைக்காது போல.!
Tomato Price: இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் உயர்ந்த தக்காளி விலை.! இனி டோமோட்டோ சாஸ் கூட கிடைக்காது போல.!
அக்டோபர் மாத கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் வரத்து குறைவால் இந்தியா முழுவதும் தக்காளி விலை 50% வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட செலவுகளை பாதிப்பதோடு, நாட்டின் பணவீக்கத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

சட்டென்று மாறிய தக்காளி விலை
இந்தியர்கள் அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளில் தக்காளி முக்கியமானது. சட்னி, சாதம், ரசம், கறி, கூட்டு, பொரியல் என பல உணவுகளின் அடிப்படைச் சேர்வாக இருப்பதால், தக்காளி விலை உயர்வு நேரடியாக குடும்பங்களின் அன்றாட செலவைக் கூடுதலாக்கும். அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழையின் தாக்கம், பயிர் சேதம், வரத்து குறைவு ஆகிய காரணங்களால் கடந்த 10-15 நாட்களிலேயே தக்காளி விலை 50% வரை உயர்ந்துள்ளது.
சண்டிகரில் விண்ணை தொட்ட தக்காளி விலை
நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரை தக்காளியின் அகில இந்திய சராசரி சில்லறை விலை கிலோ ரூ.36 இலிருந்து ரூ.46 ஆக உயர்ந்து 27% அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் இந்த உயர்வு இன்னும் கடுமையாகப் பதிவாகியுள்ளது. சண்டிகரில் தக்காளி விலை 112% வரை உயர்ந்துள்ளது. அதேபோல் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 40% க்கும் மேல் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
இப்பவே தொடங்கியது விலை உயர்வு
நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவிலும் 45% உயர்வும், வடஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மையமான டெல்லியில் 26% உயர்வும் ஏற்பட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கியிருப்பதும், அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் வருவதும் தக்காளிக்கு கூடுதல் தேவை உருவாக்கி விலையை மேலும் உயர்த்தும் என வியாபாரிகள் கணிக்கின்றனர். தற்போது பல இடங்களில் தரமான தக்காளி கிலோ ரூ.80 வரை விற்கப்படுகிறது. சென்னை சந்தையில் விலை கிலோ ரூ.30–40 வரை உள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் பயிர் சேதம் மட்டுமன்று, வரத்து குறைவு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த வாரத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலிருந்து ஆசாத்பூர் சந்தைக்கு வரும் லாரிகள் பாதியாகக் குறைந்துள்ளன. அதிக மழைப்பொழிவு பல பகுதிகளில் பயிர்களை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு
இங்கே குறிப்பிட வேண்டியது, அக்டோபர் மாதத்தில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலைகள் சரிந்ததால் நாட்டின் பணவீக்கம் 0.25% ஆக குறைந்து 2013க்குப் பிறகு மிகக் குறைந்த நிலையை எட்டியது. தக்காளி பணவீக்கம் -42.9% என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது விலை மீண்டும் கூடியுள்ளதால் பணவீக்கத்திலும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இனி ஹோட்டல்ல சாப்பிட முடியாது
தக்காளி விலை இத்தகைய கோபமான உயர்வைச் சந்திப்பதால், சாமானிய மக்கள் தக்காளி சட்னி, தக்காளி சாதம்"போன்ற உணவுகளை குறைக்கும் நிலை உருவாகியுள்ளது. தக்காளி விலை உயர்வால் சாப்பாடு விலையும் அதிகரிக்கமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சந்தை நிலவரம் பார்த்தால், வரவிருக்கும் வாரங்களிலும் தக்காளி விலை மேலும் ஏறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

