உணவு பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி! 3 முறையாக கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, அதன் சேவைக்கட்டணத்தை 3வது முறையாக உயர்த்தியுள்ளது.

உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி
இந்தியாவில் வீடு தேடி வந்து உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் பெருகி விட்டன. சோமெட்டோ, (Zomato), ஸ்விக்கி (swiggy), ஜெப்டோ (zepto) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உணவு விநியோக சந்தையில் போட்டி போட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு நிறுவனமும் அதிகரித்து வரும் போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய புதுமைகளை உருவாக்கி வருகின்றன.
சேவை கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி
இந்நிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, கடந்த மூன்று வாரங்களில் மூன்றாவது முறையாக அதன் சேவை கட்டணத்தை (platform fee) ரூ.15 ஆக உயர்த்தி உள்ளது. பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் ஆர்டர்களைப் பயன்படுத்தி அதன் லாபத்தை அதிகரிக்க ஸ்விக்கி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேவைக் கட்டணம் என்றால் என்ன?
முன்னதாக, சுதந்திர தினத்தன்று ஸ்விக்கி தனது சேவை கட்டணத்தை ரூ.14 ஆக லேசாக உயர்த்தி, பின்னர் ரூ.12 ஆக குறைத்தது. தற்போது, ஆர்டர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சேவை கட்டணம் என்பது, டெலிவரி கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் உணவக கட்டணங்கள் போன்றவற்றுக்கு மேல், ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ (Zomato) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு ஆர்டருக்கும் வசூலிக்கும் கூடுதல் கட்டணம் ஆகும்.
சொமேட்டோவும் கட்டணத்தை உயர்த்தி இருந்தது
இந்த கட்டணம் நகரங்களுக்கும் நாட்களுக்கும் இடையில் வேறுபடுகிறது. மேலும் இது பெரும்பாலும் தேவைக்கேற்ப மாறுபடும். ஸ்விக்கியின் போட்டியாளரான சொமேட்டோ அதன் சேவைக்கட்டணத்தை ரூ.12 ஆக உயர்த்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து பண்டிகை கால அவசரத்தை பயன்படுத்திக் கொள்ள ஸ்விக்கியும் இப்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
ஸ்விக்கியின் 2 மில்லியன் ஆர்டர்கள்
ஸ்விக்கி ஒரு நாளைக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களைப் பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஒரு நாளைக்கு ரூ.3 கோடி வரை வருமானம் ஈட்ட உதவுகிறது. இது முன்பு ரூ.12 ஆக இருந்தபோது கிடைத்த ரூ.2.4 கோடியை விட அதிகம். இந்த கட்டண விகிதம் நீடித்தால், இது ஒரு காலாண்டிற்கு ரூ.54 கோடி மற்றும் ஆண்டுக்கு ரூ.216 கோடி கூடுதல் வருமானமாக இருக்கும்.