- Home
- Business
- PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.6,000 ஊக்கத்தொகை.. உங்ககிட்ட இந்த ஆவணம் இருக்கா?
PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.6,000 ஊக்கத்தொகை.. உங்ககிட்ட இந்த ஆவணம் இருக்கா?
PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.6,000 நிதியுதவி வழங்குகிறது. ரதமர் மாத்ரு வந்தனா யோஜனா எனப்படும் இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்யவும், தாய்-சேய் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு ‘பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா’ (PMMVY) என்ற மகப்பேறு உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை நிதியுதவி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
எவ்வளவு நிதியுதவி கிடைக்கும்?
பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா இரண்டு நிலைகளில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவிகளை வழங்குகிறது:
முதல் பிரசவம் (முதல் குழந்தை): முதல் குழந்தைக்கு விண்ணப்பிக்கும் போது மொத்தம் 5,000 ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
முதல் தவணை ரூ.3,000: கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே பதிவு செய்து, குறைந்தது ஒருமுறை மருத்துவப் பரிசோதனை (Antenatal Check-up) செய்த பின் வழங்கப்படும்.
இரண்டாவது தவணை ரூ.2,000 குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டு, 14 வாரங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய முதற்கட்டத் தடுப்பூசிகள் அனைத்தும் போட்டு முடித்த பின் வழங்கப்படும்.
இரண்டாவது பிரசவம் (பெண் குழந்தையாக இருந்தால்): பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கும் வகையில், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால், ஒரே தவணையாக 6,000 ரூபாய் நேரடியாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு யார் தகுதியானவர்?
19 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) இருக்க வேண்டும். (MGNREGA வேலை அட்டை, இ-ஷ்ரம் அட்டை வைத்துள்ளவர்களுக்கும் முன்னுரிமை உண்டு).
மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அல்லது ஏற்கனவே சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புப் பலன்களைப் பெறுபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
தாயின் ஆதார் அட்டை (தற்போதைய விதிகளின்படி கணவரின் ஆதார் கட்டாயமில்லை).
ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கு புத்தக நகல்.
தாய்-சேய் பாதுகாப்பு அட்டை (MCP Card - மொபைல் எண் பதிவுடன்).
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி அட்டை (இரண்டாம் தவணைக்கு மட்டும்)
எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையம் (Anganwadi Centre) அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC) நேரில் செல்லலாம். அங்குள்ள அங்கன்வாடி ஊழியர்கள் அல்லது ஆஷா (ASHA) பணியாளர்களிடம் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmmvy.wcd.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
அதில் 'Citizen Login' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழைய வேண்டும்.
அதன் பின், உங்களுக்கான விவரங்களைப் பூர்த்தி செய்து, கேட்கப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றிச் சமர்ப்பிக்கலாம்.
குழந்தை பிறந்த 270 நாட்களுக்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

