பேடிஎம் வாடிக்கையாளர்கள் கவனமா இருங்க.. யுபிஐ சேவைகள் அதிரடி மாற்றம்
பேடிஎம் யுபிஐ சேவைகளில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பேடிஎம் யுபிஐ சேவைகள் ஆகஸ்ட் 31 முதல் நிறுத்தப்படும் என்ற செய்திகளுக்கு பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது.

பேடிஎம்
பேடிஎம் யுபிஐ சேவைகள் ஆகஸ்ட் 31 முதல் நிறுத்தப்படும் என்ற செய்திகளுக்கு பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. கூகுள் ப்ளேயில் இருந்து வந்த அறிவிப்புதான் இந்த குழப்பத்திற்கு காரணம். எல்லா பேடிஎம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தாது, சில வகை பரிவர்த்தனைகளுக்கு மட்டும்தான் மாற்றம் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு முறை மட்டும் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
பணப்பரிமாற்றங்கள்
வணிகர்களுக்கான பணப்பரிமாற்றங்களும் தொடரும். பொருட்கள் வாங்கும்போது கடைகளில் செய்யும் பணப்பரிமாற்றங்கள், நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, பில்கள் செலுத்துவது போன்ற சேவைகள் வழக்கம்போல் செயல்படும். தொடர் பணப்பரிமாற்றங்களில் தான் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். யூடியூப் பிரீமியம், கூகுள் ஒன் ஸ்டோரேஜ் போன்ற சந்தா சேவைகளுக்கு பேடிஎம் யுபிஐ மூலம் மாதம் பணம் செலுத்துபவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும்.
யுபிஐ ஐடி
இவர்கள் தங்கள் பழைய @paytm யுபிஐ ஐடியை புதிய ஐடிக்கு மாற்ற வேண்டும். உதாரணமாக, ஒருவரின் யுபிஐ ஐடி rajesh@paytm என்றால், அதை rajesh@pthdfc, rajesh@ptaxis, rajesh@ptyes, அல்லது rajesh@ptsbi என்று வங்கியுடன் இணைக்கப்பட்ட புதிய ஐடிக்கு மாற்ற வேண்டும். தேசிய பணப்பரிமாற்றக் கழகத்தின் (NPCI) அனுமதியுடன் பேடிஎம் மூன்றாம் தரப்பு செயலி வழங்குநராக மாறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் ப்ளே
கூகுள் ப்ளே அனுப்பிய அறிவிப்புதான் இந்த குழப்பத்திற்கு காரணம். தொடர் பணப்பரிமாற்றங்களை புதுப்பிக்க ஆகஸ்ட் 31, 2025 கடைசி தேதி என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 1 முதல் புதிய விதி நடைமுறைக்கு வரும்.