தீபாவளிக்கு முன் டிஏ உயர்வு.. செப்டம்பரில் தேடி வரும் குட் நியூஸ்
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே செப்டம்பர் மாதத்தில் டிஏ உயர்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. டிஏ உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் மற்றும் நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.

தீபாவளி டிஏ உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் ஒரே சமயத்தில் வந்தது போல் மகிழ்ச்சியான செய்தி இது. தீபாவளி வரை புதிய டிஏ கிடைக்காது என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய அரசு தீபாவளிக்கு முன்பே அதாவது செப்டம்பர் மாதத்தில் டிஏ உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது, நிலுவைத் தொகையாக அந்த பணம் அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள்
டிஏ எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். தற்போது 55% ஆக உள்ள டிஏ, 3% முதல் 4% வரை உயர்த்தப்பட்டு, 59% ஆக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு இரண்டு முறை டிஏ உயர்வை அறிவிக்கிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திலும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் டிஏ உயர்வு அறிவிக்கப்படும்.
டிஏ உயர்வு
டிஏ உயர்வு அறிவிப்பு தாமதமானாலும், ஊழியர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அவர்களின் நிலுவைத் தொகை முழுவதும் வழங்கப்படும். டிஏ உயர்வு எவ்வளவு, எப்போது அமலுக்கு வரும் என்பதை மத்திய அரசு அறிவித்தால் போதும், ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைத்துவிடும். டிஏ உயர்வின் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் சிறிதளவு உயர்ந்து வருகிறது. பணவீக்கமும் டிஏ உயர்வைப் பாதிக்கும்.
கோவிட் கால டிஏ நிலுவை
கோவிட் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும், இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஓய்வூதியதாரர்களுக்கும் கோவிட் காலத்தில் டிஏ நிறுத்தி வைக்கப்பட்டது. எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும்போது, இந்த நிலுவைத் தொகை வழங்கப்படலாம் என ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.