- Home
- Astrology
- Diabetes : சர்க்கரை நோயா? இந்த 6 மூலிகைகள் மட்டும் சாப்பிடுங்க.! சர்க்கரை காணாமல் போகும்
Diabetes : சர்க்கரை நோயா? இந்த 6 மூலிகைகள் மட்டும் சாப்பிடுங்க.! சர்க்கரை காணாமல் போகும்
பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆறு மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலமாக சர்க்கரை நோயை குறைக்க முடியும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Manage diabetes with these 6 herbs
எவ்வளவுதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், இன்சுலின் எடுத்துக் கொண்டாலும் பலருக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வராமலேயே இருக்கிறது. சர்க்கரை அளவு கட்டுக்குள் வரவில்லை என்றால் பாத எரிச்சல், கால் பாதங்கள் மரத்து போதல், கால் நரம்புகள் வீக்கம் அடைதல், சிறுநீரகக் கோளாறுகள், கண்பார்வை மங்குதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பது குறித்து பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஜெயரூபா விளக்கமளித்துள்ளார். அதில் அவர் ஆறு மூலிகைகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். அந்த மூலிகைகள் என்ன? அதை எப்படி சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடுக்காய்
நீரிழிவால் வரும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு கடுக்காய், நாவல் கொட்டை, சீந்தில், மஞ்சள், வெந்தயம், நெல்லிக்காய் ஆகிய ஆறு மூலிகைகள் உதவுகிறது. இது நீரிழிவு வந்தவர்களுக்கும், நீரிழிவு வராமல் தடுப்பதற்கும், நீரிழிவால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத போது கடுக்காயை தினமும் எடுக்க வேண்டும். “கடுக்காய் தின்றால் மிடுக்காய் வாழலாம்” என்கிற பழமொழியின் படி கடுக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் சீராகிறது. இதன் துவர்ப்பு தன்மை காரணமாக இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. குறிப்பாக உயர் சர்க்கரை அளவு இருப்பவர்கள் தொடர்ந்து கடுக்காயை எடுத்து வரும் பொழுது கிளைக்கேஷன் செயல்பாடு தடுக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவு குறையவும், கட்டுப்படவும் உதவி புரிகிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் என்பது வைட்டமின் சி நிறைந்துள்ள ஒரு மூலிகையாகும். நெல்லிக்காயை சாப்பிட்டு வருபவர்களுக்கு வயோதிகம் ஆனாலும் முதிர்ந்த தோற்றம் ஏற்படாது. இதில் உள்ள துவர்ப்பு தன்மை சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிய அளவில் உதவி புரிகிறது. நெல்லிக்காய் இரத்தத்தில் உள்ள பீட்டா செல்களை பாதுகாக்கும் வேலையை செய்கிறது. இதன் காரணமாக சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. சர்க்கரை நோயால் வரும் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகளையும் இது தடுக்கிறது. குறிப்பாக நெல்லிக்காயில் உள்ள விதைகளை தூக்கி எறியாமல் அதை நெல்லிக்காயுடன் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் சாறாக பருகி வரும்பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கிறது. தினமும் காலை நெல்லிக்காயை விதைகளுடன் அரைத்து மோரில் கலந்து குடித்து வரலாம்.
சீந்தில் மற்றும் மஞ்சள்
சீந்தில் என்னும் மூலிகை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கொடி, தண்டு, இலை என அனைத்துமே பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. இது கல்லீரலை பாதுகாக்கும் மூலிகைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதை தினமும் எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படுவதோடு, கல்லீரல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் வருகிறது. அதேபோல் மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஆக்ஸிஜனேற்றப் பண்புகளை கொண்டுள்ளது. இந்த மஞ்சளை மற்ற மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது நீரிழிவு நோயால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவி புரிகிறது. வெந்தயத்தில் உள்ள கரையும் மற்றும் கரையா நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் இயக்கம் தொடங்கி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
வெந்தயம் மற்றும் நாவல்கொட்டை
வெந்தயத்தில் இருக்கும் 4-ஹைட்ராக்சிஐசோலேஷன் என்னும் அமினோ அமிலம் உடல் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. மேலும் இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்துவதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க பயன்படுகிறது. அதேபோல் நாவல் பழமும் நாவல் கொட்டையும் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக அமைகிறது. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு நாவல் கொட்டை சிறந்த மருந்தாகும். இதில் உள்ள ஆந்தோசைனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் காரணமாக இது கரு ஊதா நிறத்தில் இருக்கிறது. தொடர்ந்து நாவல் கொட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. நாவல் கொட்டையில் இருக்கும் சில மூலக்கூறுகள் கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலினை போலவே செயல்படும் தன்மை கொண்டது.
இந்த மூலிகைகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மூலிகைகளையும் வாங்கி சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இதை சம அளவில் எடுத்து கலந்து காற்று புகாத டப்பாக்களில் அடைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் அளவு சூடான நீரில் கலந்து டீ போல குடிக்கலாம். நாள்பட்ட நீரிழிவு, கட்டுக்குள் வராத சர்க்கரை அளவு இருப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையும் குடிக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளின் பொடிகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கியும் பயன்படுத்தலாம். இந்த மூலிகைகளை பயன்படுத்தி வரும்பொழுது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சர்க்கரை அளவு மிகவும் குறையவும் வாய்ப்பு உண்டு. சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கவும் இந்த மூலிகைகள் உதவும் என்பதால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தினமும் ஒருவேளை குடித்து வரலாம்.
குறிப்பு: இந்த மூலிகைகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவர்களை அணுகி அவர்களின் பரிந்துரையில் மாத்திரை வடிவத்திலும் வாங்கி சாப்பிடலாம். இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்துமே ஆயுர்வேத மருத்துவர் ஜெயரூபா வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையிலானது மட்டுமே. இதன் உண்மைத் தன்மை, பக்க விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் உடல் நலனும் வேறுபடும் என்பதால் உங்கள் மருத்துவரை அணுகி சரியான ஆலோசனை பெற்று அதன் பிறகு மருத்துவத்தை துவங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.