Diabetes : நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய 5 கார்போஹைட்ரேட் உணவுகள்.!
நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஐந்து கார்போஹைட்ரேட் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Best Carbohydrate Foods for Diabetes
நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸ்களாக மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்கும். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உடலால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் இந்த குளுக்கோஸை ஈடுகட்ட இன்சுலினால் முடிவதில்லை. இன்சுலின் பற்றாக்குறை அல்லது இன்சுலின் எதிர்ப்பு காரணமாக குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாமல் இரத்தத்திலேயே தங்கி விடுகிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு கணிசமாக உயர்கிறது. எனவேதான் நீரிழிவு நோயாளிகளை கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கார்போஹைட்ரேட் உணவுகள்
அதேசமயம் கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலுமாக கைவிடுதலும் கூடாது. கார்போஹைட்ரேட்டுகளுடன் சேர்த்து நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகளை இணைத்து சரிவிகித உணவை உண்ண வேண்டும். குறிப்பாக ஒரு நாளைக்கு 60 கிராம் வரை கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணலாம். நீரழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட்டுகளை தவிர்க்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. சரியான கார்போஹைட்ரேட்டுகளை சரியான அளவில் தேர்ந்தெடுக்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள அதேசமயம் குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்ட கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்து கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முழு தானியங்கள் மற்றும் பயிறுகள்
முழு தானியங்களில் கார்போஹைட்ரேட்டுகளுடன் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. இதை செரிமானத்தை மெதுவாக்குவதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஓட்ஸ், பழுப்பு அரிசி, ராகி, கோதுமை, ஆகிய முழு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்து, கால்சியம் போன்றவை நிறைந்து இருப்பதால் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும். கொண்டைக்கடலை, பீன்ஸ், முளைகட்டிய பயிறுகள் ஆகியவை புரதம் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள் ஆகும். இவை குறைந்த கிளைசீமிக் குறியீடுகளை கொண்டுள்ளன. கருப்பு பீன்ஸ், ராஜ்மா, முளைக்கட்டிய பயிறுகள் ஆகியவற்றில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதங்கள் நிரம்பியுள்ளன. இவற்றை சாலட்கள், சுண்டல்கள் அல்லது கறிகளில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இவை உடனடியாக இரத்த சர்க்கரை அளவு ஏற்றாது.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
பெரும்பாலான காய்கறிகள் குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்டவை. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. கீரை, முட்டைகோஸ், பிரக்கோலி, காலிஃப்ளவர், நூற்கோல் ஆகிய காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். பழங்களை உண்ண விரும்புபவர்கள் நெல்லிக்காயை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் சி சருமப் பொலிவுக்கு உதவுவதோடு துவர்ப்பு தன்மை காரணமாக சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. அதூ போல் கொய்யா பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
நட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள்
நட்ஸ் மற்றும் விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் அளவை கட்டுப்படுத்தி இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. பாதாம், வால்நட், ஆளி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், ஆரோக்கியமான கொழுப்புகளான ஒமேகா-3, நார்ச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகள் மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் சாப்பிடாமல் இது போன்ற நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது அது இரத்த சர்க்கரை அளவை ஏற்றாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் எந்த உணவாக இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் அளவோடு சாப்பிட வேண்டியது அவசியம்.
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களின் அடிப்படையிலானது மட்டுமே. ஒவ்வொருவரின் உடல் நலனும் வேறுபடலாம். எனவே உங்கள் உணவு திட்டத்தை வடிவமைப்பதற்கு முன்னர் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணறுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.