இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன பீலே என்றழைக்கப்படும் பிரபல கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்ட் உயிரிழந்தார்.
Palestinian Footballer Killed in Israeli Attack: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரால் காசா நகரமே முற்றிலுமாக உருக்குலைந்து மக்கள் வாழத்தகுதியில்லாத நகரமாக மாறி விட்டது. போர் விதிமுறைகளை மீறி பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பல்வேறு நாடுகள் கண்டித்தும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
பிரபல கால்பந்து வீரர் பலி
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் உணவு வழங்கி வரும் அவற்றை போட்டி போட்டுக் கொண்டு காசா மக்கள் பெறுவது மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் கொஞ்சம் கூட மானிதாபிமானமின்றி மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது வேதனையிலும் வேதனையாக உள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன பீலே என்று அழைக்கப்பட்ட பிரபல கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்ட் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவருக்கு வயது 41. அவருக்கு மனைவியும், 5 குழந்தைகளும் உள்ளனர்.
'பாலஸ்தீன பீலே' மரணம்
ஆகஸ்ட் 9 (அதாவது நேற்று) அன்று காசாவில் மனிதாபிமான உதவிக்காகக் காத்திருந்தபோது இஸ்ரேலிய தாக்குதலில் சுலைமான் அல்-ஒபெய்ட் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. சுலைமான் அல்-ஒபெய்ட் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை கதாமத் அல்-ஷாதியுடன் தொடங்கினார், பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா ஸ்போர்ட்டில் மர்காஸ் ஷபாப் அல்-அமாரியுடன் இணைந்தார்.
100க்கும் மேற்பட்ட கோல்களை அடித்ததால் அவரை 'பாலஸ்தீன பீலே' என்று அனைவரும் அழைத்து வந்தனர். சுலைமான் அல்-ஒபெய்ட் 2007ல் பாலஸ்தீனத்தின் தேசிய கால்பந்து அணிக்காக அறிமுகமானார். 24 போட்டிகளில் பங்கேற்று இரண்டு முறை கோல் அடித்தார்.
காசாவில் 662 விளையாட்டு வீரர்கள்
காசாவில் மே மாத இறுதியில் இருந்து உணவு உதவி பெற முயன்றபோது 1,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதில் விளையாட்டுத் துறையை சேர்ந்த 662 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 321 பேர் கால்பந்து வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான உதவி மீதான கடுமையான இஸ்ரேலிய கட்டுப்பாடுகள் காசாவை பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளன, இதனால் பலர் உணவைப் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இரங்கல்
சுலைமான் அல்-ஒபெய்ட் இறப்புக்கு பாலஸ்தீன கால்பந்து சங்கம் மற்றும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன. பாலஸ்தீன விளையாட்டுத்துறை வரலாற்றில் அவர் ஒரு முக்கியப் பங்கு வகித்தவர் என்றும், அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
