இன்னும் 1 வாரத்தில் காசா போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக இஸ்ரேல் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

Donald Trump Announces Ceasefire In Gaza Within Week: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரால் காசா நகரமே முற்றிலுமாக உருக்குலைந்து மக்கள் வாழத்தகுதியில்லாத நகரமாக மாறி விட்டது. போர் விதிமுறைகளை மீறி பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

பல்வேறு நாடுகளின் தலையீட்டின்பேரில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே 42 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்ததையும் மீறி இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டன. ஒரு கட்டத்தில் ஹமாஸ் அமைப்பினர் இந்த போரில் இருந்து பின்வாங்கத் தொடங்கினார்கள். சமீபகாலமாக காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ படைகளுக்கு ஹமாஸ் அமைப்பினர் பதிலடி கொடுத்தாலும், இஸ்ரேலின் வலிமையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

கைவிட மறுக்கும் இஸ்ரேல்

இதன்பிறகு ஹமாஸ் அமைப்பினர் பணம் இல்லாமல் தள்ளாடி வருவதாகவும், காசா மக்களே ஹமாஸ் அமைப்பினரை நம்பவில்லை என்றும் தகவல் வெளியாகி இருந்தன. மறுபக்கம் இஸ்ரே, ஈரான் இடையே போர் தொடங்கிய நிலையில், இஸ்ரேல் முழுமையம் அந்த பக்கம் திரும்பியது. இதனால் சில நாட்கள் காசா மக்கள் நிம்மதியாக இருந்தனர். பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தியும் காசாவின் மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட மறுக்கிறது.

காசா போர் குறித்து டிரம்ப்

இந்நிலையில், காசா போர் இன்னும் ஒரு வாரத்துக்குள் நிறுத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ''சம்பந்தப்பட்ட சிலருடன் நான் இப்போதுதான் பேசினேன். இது ஒரு பயங்கரமான சூழ்நிலையாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்திற்குள், நாங்கள் ஒரு போர் நிறுத்தத்தைப் பெறப் போகிறோம் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் அந்தப் பகுதிக்கு நாங்கள் நிறைய பணத்தையும் நிறைய உணவையும் வழங்குகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் இறந்து கொண்டிருப்பதால் நாங்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் '' என்று தெரிவித்தார்.

ஈரான் கொடுத்த அழுத்தம் காரணமா?

ஆனால் இந்த போர் நிறுத்தம் தொடர்பாக யாரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதை டிரம்ப் சொல்லவில்லை. டிரம்ப்பின் இந்த கருத்து தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக இஸ்ரேல்-ஈரான் நெருக்கடிக்கு மத்தியில் ஜி-7 மாநாட்டில் காசா போர் நிறுத்தத்திற்கு ஈரான் உச்ச தலைவர் மெலோனி அழுத்தம் கொடுத்தார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கருத்து

இந்த வார தொடக்கத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ''டிரம்ப் ஒரு போர் நிறுத்தத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றி வருவதாகக் கூறினார். "காசாவில் டிரம்ப் மிகவும் உறுதியானவர். போர் நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர் என்று நான் உணர்ந்தேன், மேலும் இந்த விஷயத்தில் அவரது அர்ப்பணிப்பு அவசியம் என்று நான் நினைக்கிறேன். அவரது குழு தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும்'' என்று கூறியிருந்தார்.