இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பணம் இல்லாமல் தள்ளாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காசா மக்களிடமும் அவர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது.
Hamas reeling from lack of money: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரால் காசா நகரமே முற்றிலுமாக உருக்குலைந்து மக்கள் வாழத்தகுதியில்லாத நகரமாக மாறி விட்டது. போர் விதிமுறைகளை மீறி பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
பணமின்றி பரிதவிக்கும் ஹமாஸ்
அதுவும் சமீபகாலமாக காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ படைகளுக்கு ஹமாஸ் அமைப்பினர் பதிலடி கொடுத்தாலும், இஸ்ரேலின் வலிமையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பணம் இல்லாமல் தள்ளாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 1987 இல் தொடங்கப்பட்டதிலிருந்து ஹமாஸ் அதன் மிகக் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது லண்டனை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான அல் ஷார்க் அல் அவ்சாத்தின் அறிக்கை, ஹமாஸ் தனது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் காசாவை நிர்வகிக்கவும் போராடி வருவதாகக் குறிப்பிடுகிறது.
ஹமாஸ் உறுப்பினர்களுக்கு உணவளிக்க கூட பணமில்லை
ஹமாஸ் குடும்பங்களுக்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு காசாவில் உள்ள அதன் சிவில் ஊழியர்களுக்கு 250 டாலர்களை மட்டுமே விநியோகித்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவித்துள்ளது, இது அவர்களின் குடும்பங்களுக்கு உணவளிப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளும் தொழிலாளர்களிடையே அதிருப்தியைத் தூண்டியது. மேலும், அவசர சேவைகள் போன்ற சில ஹமாஸ் அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட சமூக மற்றும் சேவைப் பணிகளுக்கான பட்ஜெட்டுகள் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.
ஹமாஸின் முக்கிய தலைவர்கள் பலி
ஹமாஸ் அதன் இறந்த செயல்பாட்டாளர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்களின் குடும்பங்கள், கைதிகள் மற்றும் காயமடைந்தவர்களின் உயிர்வாழ்விற்கான செலவை ஈடுகட்ட போராடி வருவதாகவும், வழக்கமான கொடுப்பனவுகளும் இரண்டு மாதங்களுக்கும் முன்பே நிறுத்தி விட்டதாகவும் அல் ஷார்க் அல் அவ்சாத் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காசா பகுதி முழுவதும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் முக்கிய ஹமாஸ் தலைவர்களின் கொலைகளுக்கு வழிவகுத்தது.
உள்ளூர் மக்களிடம் ஹமாஸ் செல்வாக்கு சரிவு
இது ஹமாஸ் அமைப்பின் நிர்வாக மற்றும் நிறுவன மட்டங்களிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பணம் மட்டுமின்றி முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் இல்லாமலும் ஹமாஸ் தள்ளாடி வருகிறது. மேலும் காசா மக்கள் மற்றும் மேற்குக் கரையில் வசிப்பவர்கள் மத்தியிலும் ஹமாஸின் புகழ் குறைந்துள்ளது. உள்ளூர்வாசிகள் காசாவின் கற்பனை செய்ய முடியாத அழிவுக்கு ஹமாஸ் தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். சில உள்ளூர் மக்கள் ஹமாஸ் உறுப்பினர்களைத் தாக்கவோ அல்லது சுடவோ துணிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
