அர்ஜெண்டினா கால்பந்து வீரர்களுக்கு தங்க ஐஃபோன்களை பரிசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த லியோனல் மெஸ்ஸி
கால்பந்து உலக கோப்பையை அர்ஜெண்டினா அணி வென்றிருந்த நிலையில், அந்த அணியின் வீரர்களுக்கு தங்க ஐஃபோன்களை சர்ப்ரைஸ் பரிசாக வழங்கை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் லியோனல் மெஸ்ஸி.
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பையை வென்று அசத்தியது அர்ஜெண்டினா அணி. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அதுவே கடைசி உலக கோப்பையாக இருக்கலாம் என்பதால் மெஸ்ஸி மீதும் அர்ஜெண்டினா மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
அந்த எதிர்பார்ப்பிற்கு பாத்திரமாக மெஸ்ஸியும், அர்ஜெண்டினா அணியும் நடந்துகொண்டது ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்து உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது அர்ஜெண்டினா அணி.
அர்ஜெண்டினா அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ள லியோனல் மெஸ்ஸி தனது மகிழ்ச்சியை மற்ற வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்க நினைத்தார். அதற்காக அவர்களுக்கு தங்க ஐஃபோன்களை பரிசாக வழங்கியுள்ளார்.
வீரர்களின் பெயர்கள், ஜெர்சி எண்கள் மற்றும் அணி நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய தங்கத்தால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட ஐஃபோன்களை ஆர்டர் செய்து வாங்கி அனுப்பியுள்ளார் மெஸ்ஸி. இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்றே முக்கால் கோடி விலைக்கு இந்த ஐஃபோன்களை வாங்கி நேரடியாக வீரர்களின் வீடுகளுக்கே அனுப்பிவைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மெஸ்ஸி.
தங்கத்தால் ஆன தனித்துவமான 35 ஐஃபோன்களை தங்களிடம் மெஸ்ஸி ஆர்டர் செய்ததாக அந்த ஃபோன்களை உற்பத்தி செய்யும் ஐடிசைன் கோல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மெஸ்ஸியின் இந்த செயலிலிருந்து, அவருக்கு உலக கோப்பை எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதை வென்றதில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.