சாஃப் U-17 சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஏற்கெனவே ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் நேற்று இந்தியா பாகிஸ்தானை பந்தாடி இருந்தது.

சாஃப் U-17 சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி குரூப் 'பி'-யில் முதலிடத்தைப் பிடித்தது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், முதலிடத்திற்கான போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. போட்டியின் 31-வது நிமிடத்தில், கேப்டன் வாங்கெம் டென்னி சிங்கின் பாஸில் தலால்முன் காங்டே இந்தியாவின் முதல் கோலை அடித்தார்.

இந்தியா அடுத்தடுத்து 2 கோல்

ஆனால், இந்திய பெனால்டி பாக்ஸில் ஹம்சா யாசிரை வீழ்த்தியதால் பாகிஸ்தானுக்கு பெனால்டி கிடைத்தது. 43-வது நிமிடத்தில் முகமது அப்துல்லா பெனால்டியை கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. இரண்டாம் பாதியில் பிபியானோ பெர்னாண்டஸின் அணி மீண்டும் முன்னிலை பெற்றது. 63-வது நிமிடத்தில் சுபம் பூனியாவின் பாஸில் குன்லைபா வாங்கீரக்பாம் இந்தியாவின் இரண்டாவது கோலை அடித்தார்.

இந்தியாவின் வெற்றி கோல்

ஆனால், ஏழு நிமிடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மீண்டும் சமன் செய்தது. இந்திய கோல்கீப்பர் மனஷ்ஜோதி பருவாவின் கையிலிருந்து நழுவிய பந்தை ஹம்சா யாசிர் கோலாக்கினார். 74-வது நிமிடத்தில் ரஹான் அகமது இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார். பூட்டானுக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் ரஹான்தான் வெற்றி கோலை அடித்திருந்தார்.

இந்தியா முதலிடம்

இந்த வெற்றியின் மூலம், குரூப் சுற்றில் தனது மூன்று போட்டிகளிலும் வென்று இந்தியா முதலிடம் பிடித்தது. முன்னதாக, மாலத்தீவை 6-0 என்ற கணக்கிலும், பூட்டானை 1-0 என்ற கணக்கிலும் இந்தியா வீழ்த்தியிருந்தது. செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்ளும்.

கிரிக்கெட்டிலும் தோல்வி அடைந்திருந்த பாகிஸ்தான்

ஏற்கெனவே நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடி இருந்தது. அபிஷேக் சர்மா 39 பந்தில் 74 ரன் விளாசி பாகிஸ்தான் கதையை முடித்திருந்தார்.