பிரதமர் மோடி நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பிரதமருக்கு சிறப்பு பரிசு அனுப்பியுள்ளார். அது என்ன பரிசு? என்பது குறித்து பார்க்கலாம். மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 17) தன்னுடைய 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நாட்டில் தொடர்ந்து 3 முறையாக பிரதமராக இருந்து மக்களின் ஏகோபித்த செல்வாக்கை பெற்ற மோடிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியின் பிறந்தாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பாஜக ஏற்பாடுகளை செய்துள்ளது.
மோடிக்கு மெஸ்ஸி அனுப்பிய பிறந்த நாள் பரிசு
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவானும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசு அனுப்பியுள்ளார். அதாவது 2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்றபோது தான் அணிந்திருந்த அர்ஜெண்டினா அணியின் ஜெர்சியில் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார் மெஸ்ஸி.
தனது ஜெர்சியை அனுப்பிய மெஸ்ஸி
''பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக மெஸ்ஸி கையொப்பமிடப்பட்ட தனது ஜெர்சியை அனுப்பியுள்ளார் . அவர் இந்தியா வரும்போது, பிரதமருடனான அவரது சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சிப்போம். அவர் இந்திய ரசிகர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் முதல் முறையாக புதுடெல்லி மற்றும் மும்பைக்கு வந்து அங்கு தனது ரசிகர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்" என்று மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் விளையாட்டு தொழில்முனைவோரும் விளம்பரதாரருமான சதத்ரு தத்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். டிசம்பர் 13ம் தேதி இந்திய கால்பந்து தலைநகரான கொல்கத்தாவுக்கு அவர் செல்ல உள்ளார். அதனைத் தொடர்ந்து மும்பைக்கு செல்கிறார். தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி டெல்லிக்கு செல்லும் லியோனல் மெஸ்ஸி, பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார். தங்கள் மாநிலத்துக்கும் வரும்படி மெஸ்ஸிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
