FIFA World Cup Final: 23வது நிமிடத்தில் கோல் அடித்த மெஸ்ஸி.. முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என அர்ஜெண்டினா முன்னிலை
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸுக்கு எதிராக முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடந்துவரும் ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஃபைனல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஆட்டம் தொடங்கியது முதலே பரபரப்பாக இருந்தது. இந்த உலக கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற வேட்கையில் அர்ஜெண்டினா களமிறங்கியது என்பது அந்த அணி தொடக்கத்திலிருந்து ஆடிய விதத்திலேயே தெரிந்தது.
ஆட்டம் தொடங்கிய முதல் நொடியிலிருந்தே கோலை நோக்கி அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை வெறித்தனமாக கொண்டுசெல்ல முயன்றனர். ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி வழக்கம்போலவே கோல் அடித்தார் லியோனல் மெஸ்ஸி.
அதன்பின்னரும் அர்ஜெண்டினாவின் கோல் வேட்கை தொடர, ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா பந்தை சாமர்த்தியமாக எடுத்துச்சென்று கோல் அடிக்க, 2-0 என முன்னிலை பெற்றது அர்ஜெண்டினா. அதன்பின்னர் முதல் பாதி ஆட்டத்தின் எஞ்சிய நிமிடங்களில் ஃபிரான்ஸ் கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.