FIFA World Cup 2022: ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் பலப்பரீட்சை.! வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை எவ்வளவு.?
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகள் கோப்பைக்கான போட்டியில் மோதுகின்றன. ஃபிஃபா உலக கோப்பை வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை விவரங்களை பார்ப்போம்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தனது கடைசி உலக கோப்பையில் ஆடும் லியோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்புடன் இந்த உலக கோப்பையில் களமிறங்கினார். அவரது கனவை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார். அர்ஜெண்டினா அணி ஃபைனலுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் அணியும் ஃபைனலுக்கு முன்னேறியது.
அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். மிகச்சிறந்த வீரர்களான மெஸ்ஸி - எம்பாப்பே நேருக்கு நேர் மோதுவதால் இந்த போட்டி மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட பிரேசில், போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறின. அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா - மொராக்கோ அணிகளுக்கு இடையே 3வது இடத்திற்கான போட்டி நடந்தது. இந்த போட்டியில் மொராக்கோ அணியை வீழ்த்தி குரோஷியா அணி 3ம் இடத்தை பிடித்தது.
அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான ஃபைனல் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஜெயித்து ஃபிஃபா உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.347 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஃபைனலில் தோற்கும் ரன்னர் அணிக்கு ரூ.248 கோடி வழங்கப்படும். 3வது இடத்தை பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.223 கோடி பரிசாக வழங்கப்படும்.