FIFA World Cup 2022: அபாரமாக ஆடிய குரோஷியா, 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி மாபெரும் வெற்றி
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அணி அபார வெற்றி பெற்றது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் க்ரூப் இ-யில் இடம்பெற்ற ஜப்பான் - கோஸ்டாரிகா அணிகள் மோதின. அந்த போட்டியில் கோஸ்டாரிகா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் வலுவான பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்றது. இந்த உலக கோப்பையில் சில சிறிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், உலக கோப்பையை சுவாரஸ்யமாக்கின. ஐக்கிய அரபு அமீரகத்திடம் அர்ஜெண்டினாவும், ஜப்பானிடம் ஜெர்மனியும் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய பரபரப்பான போட்டியில் பெல்ஜியைத்தை மொராக்கோ அணி வீழ்த்தியது.
FIFA World Cup 2022: உலக கோப்பையில் மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி
இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் குரோஷியாவும் கனடாவும் மோதின. இந்த போட்டி தொடங்கிய 2வது நிமிடத்திலேயே கனடா வீரர் அல்ஃபோன்ஸா டேவிஸ் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரெஜ் க்ரமரிக் கோல் அடிக்க, 44வது நிமிடத்தில் குரோஷியாவிற்கு 2வது கோல் அடித்து கொடுத்தார் மார்கோ லிவாஜா. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 2-1 என குரோஷியா அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 2வது பாதியில் 70வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ஆண்ட்ரெஜ் 2வது கோலை அடித்தார். இது அந்த அணிக்கு 3வது கோல். ஆட்டத்தின் 94வது நிமிடத்தில் குரோஷிய வீரர் லவ்ரோ மேஜர் 4வது கோல் அடிக்க, 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி அபார வெற்றி பெற்றது.