3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை.. வருவாயை கண்டு பேராசை அடைந்த ஃபிஃபா தலைவர்..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்
கத்தாரில் நடந்த உலக கோப்பையில் கோடிக்கணக்கில் கல்லா கட்டியதையடுத்து, அந்த வருவாயை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஈட்டுவதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஈட்டினால் என்ன என்ற யோசனையில், கால்பந்து உலக கோப்பையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது பற்றி யோசிப்பதாக ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ கூற, ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை கத்தாரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஃபிஃபா உலக கோப்பையை நடத்துவதற்கான உட்கட்டமைப்புகள், ஸ்டேடியங்கள் கட்டமைப்பு ஆகிய பணிகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வெற்றிகரமாக ஃபிஃபா உலக கோப்பையை நடத்தி முடித்தது கத்தார்.
ஃபிஃபா உலக கோப்பையை அர்ஜெண்டினா வென்றது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி வியூவர்ஷிப்பில் பெரும் சாதனை படைத்தது. கூகுளில் அதிகபட்ச தேடல் சாதனையையும் படைத்தது. ஃபிஃபா உலக கோப்பை, ஃபிஃபாவிற்கும், உலக கோப்பைய நடத்திய கத்தாருக்கும், ஒளிபரப்பிய சேனல்கள், ஆன்லைன் ஆப்களுக்கும் பெரும் வருமானத்தையும் லாபத்தையும் ஈட்டிக்கொடுத்தது.
பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன்..! காரணத்துடன் கறாரா கூறிய ஆஸி., முன்னாள் வீரர்
2018 ஃபிஃபா உலக கோப்பையில் 8400 கோடி வருமானம் ஃபிஃபாவிற்கு கிடைத்தது. 2022ல் கத்தாரில் நடந்த உலக கோப்பையில் 62 ஆயிரம் கோடியாக வருவாய் உயர்ந்தது. அந்த வருவாயை கண்டு மயங்கிய ஃபிஃபா தலைவர் இன்ஃபாண்டினோ, அடுத்த 12 ஆண்டுகளில் 3 உலக கோப்பை நடத்துவதற்கு பதிலாக 4 உலக கோப்பைகளை நடத்தினால் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறியிருந்தார். மேலும் ஃபிஃபா உலக கோப்பைகளில் இதுதான் சிறந்த உலக கோப்பை என்றும் இன்ஃபாண்டினோ கூறியிருந்தார்.
ஃபிஃபா தலைவரின் கருத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ”இவர் ஒரு முட்டாள். பேராசையை நிறுத்துங்கள்”, ”இதெல்லாம் முட்டாள்தனமானது; லாபம் பார்ப்பதில் மட்டுமே புரட்சி செய்ய விரும்புகிறார்கள்” என்றெல்லாம் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.