சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பகடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்த விவசாயி அசோகன். இவருக்கு வயது 42. இவரது முதல் மனைவி விஜயா (32). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அசோகன் 2-வதாக செல்வராணி (35) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

கொலை - சம்பவம் :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 31-ந்தேதி மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராணி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாபு மகன் சரவணனுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் செல்வ ராணி இறந்து கிடந்தார். 

இது பற்றி தகவல் அறிந்ததும் வீரகனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து செல்வராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் செல்வ ராணி கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.

குடிகாரர்கள் அட்டகாசம் :

செல்வராணி பிணமாக கிடந்த சரவணன் என்பவரின் தோட்டத்தின் அருகாமையில் தான், அவரது கணவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு செல்வராணி அடிக்கடி சென்று அங்கு விவசாய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார். சரவணன் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றின் அருகில் ஓடையும், ஏரியும் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பலர் இங்கு மது வாங்கிக்கொண்டு வந்து குடிப்பார்கள். 

இங்குள்ள ஓடையில் வளையல்கள் உடைந்து நாலாபுறமும் சிதறி கிடந்தன. இதனால் சம்பவத்தன்று மாலையில் மது குடிக்க வந்த நபர்கள், செல்வராணியின் வாயை பொத்தி இங்கு தூக்கிக்கொண்டு வந்து ஓடையில் வைத்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் செல்வராணியின் கைகளை பின்புறமாக கட்டி, உடலில் கருங்கல்லை வைத்து கட்டிகிணற்றில் வீசியுள்ளனர். 

அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க டி. எஸ். பி. ராமசந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், பகடப்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளனர். சரவணன் தோட்டத்தின் அருகாமையில் உள்ள ஓடை, ஏரி பகுதியில் தினமும் மது குடிக்க வருபவர்கள் யார்? யார்? என அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செல்வராணியுடன் கடந்த 31-ந்தேதி அசோகன் சண்டை போட்டுள்ளார். அன்று மாலை அவர் மாயமான போது அவரை அசோகன் மற்றும் உறவினர்கள் தேடாதது ஏன்? போலீசில் புகார் கொடுக்காதது ஏன்? என்பதும், செல்வராணி உடலை பார்த்து விட்டு யாரென்று தெரியவில்லை என கூறியதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.