நண்பரின் மகளை பலாத்காரம் செய்த மூத்த அரசு அதிகாரி! உருக்குலைந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த சிறுமி!
2020 முதல் 2021 வரை 3 ஆண்டுகளாக சிறுமி அவர்களின் பாதுகாப்பில் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில்தான் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள புராரியில் தனது நண்பரின் 17 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த அரசு அதிகாரியும் அவரது மனைவி சேர்ந்து வற்புறுத்தி தனக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம்சாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அரசு அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் காவல்துறை டிசிபி சாகர் சிங் கல்சி கூறியிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியின் மனைவியையும் போலீசார் விசாரணையில் இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் துணை இயக்குநராக உள்ளவர். பெண் குழந்தைகள் நலனுக்காக உழைக்க வேண்டியவரே இந்த இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்தது ஏன்? கர்நாடகாவில் காங். அரசைக் கண்டித்து பாஜக போராட்டம்
சிறுமியின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். "எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது, சட்டம் அதன் கடமையைச் செய்யும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை துஷ்பிரயோகம் போன்ற தீவிரமான விஷயங்களில் டெல்லி அரசு மிகவும் கவனமாக நடந்துகொள்ளும்" என்றும் போலீசார் கூறுகின்றனர்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கொடுமை நடந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த வாரம் சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் இதுபற்றி தெரியவந்திருக்கிறது. விரிவான உளவியல் ஆலோசனைக்குப் பிறகு, தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் மற்றும் கவுன்சிலிங் கொடுத்தவர்களிடம் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் உள்ளூர் தேவாலயத்திற்குச் செல்வது வழக்கம். குற்றம்சாட்டப்பட்டும் மூத்த அரசு அதிகாரியும் தனது குடும்பத்துடன் அங்கு வருவார். காலப்போக்கில், இரு குடும்பங்களும் நெருக்கமாகின. இச்சூழலில் சிறுமியின் தந்தை 2020 இல் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்த அதிகாரி தாயின் சம்மதத்துடன் சிறுமியை தன் வீட்டில் தங்க அழைத்துச் சென்றார்.
அக்டோபர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை சிறுமி அவர்களின் பாதுகாப்பில் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில்தான் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபரும் அவரது மனைவியும் தான் கருவுற்றதை அறிந்ததயும் கர்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தியதாகவும் சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார். “குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சிறுமிக்கு அதற்குரிய மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என மூத்த அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
2021 இல் சிறுமி தனது தாய் வீட்டிற்கு திரும்பியதும், அமைதியாக இருக்க ஆரம்பித்திருக்கிறார். தனது தாயிடம்கூட தனக்கு நேர்ந்த துயரத்தை வெளிப்படுத்தவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்குச் சென்றபோதுபோது மருத்துவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
(உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாக்க அடையாளத்தை வெளியிடக்கூடாது என்பதற்கு ஏற்ப பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)