சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி. இவரும் கோவையைச் சேர்ந்த கோபி என்கிற இளைஞரும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோபி அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிகிறது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மோகனேஸ்வரி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றுவந்துள்ளார். கணவர் கோபி வந்து அழைத்தும் அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 10ம் தேதி கங்காபுதூர் அருகே இருக்கும் ஒரு முட்புதருக்குள் மோகனேஸ்வரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோகனேஸ்வரியை அவரது கணவரே கொலை செய்தது தெரிய வந்தது. அவரை காவலர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நண்பர்கள் நான்கு பேர் துணையுடன் மோகனேஸ்வரியை கழுத்தறுத்து கொன்றதாக கூறியுள்ளார்.

அவர்கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜி, காளியப்பன், வீரங்கன், மோகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.