திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயது மாணவியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். டிக் டாக் செயலியில் ஆடிப்பாடி காணொளி வெளியிட்ட இவர் அதிகமான லைக்குகளையும், கமெண்ட்களையும் பெற்றுள்ளார். இதனால் மேலும் மேலும் வீடியோக்கள் பல வெளியிட்ட டிக் டாக் பிரபலமாக உருவாகியுள்ளார்.

இவரது காணொளிகளில் பலர் கமெண்ட் செய்து வந்துள்ளனர். அதில் பல்லடம் அருகே இருக்கும் செலக்கரச்சலை சேர்ந்த வேல்முருகன் என்பவரும் ஒருவர். சிறுமியிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அவர், தொலைபேசி எண்ணையும் வாங்கியுள்ளார். அதன்பிறகு வேல்முருகனுடன் தொடர்ச்சியாக பேச தொடங்கியுள்ளார் ரேகா. இதில் இருவரிடையேயும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதைபயன்படுத்தி ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியிடம் வேல்முருகன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அவர் கர்ப்பம் தரிக்கவே அதன்பிறகு வேல்முருகன் சிறுமியிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார்.

இதனால் செய்வதறியாது திகைத்த ரேகா மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டிலும் யாரிடமும் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் தற்கொலை செய்ய முடிவெடுத்து மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக காவல்துறைக்கு அளித்த மரணவாக்குமூலத்தில் டிக் டாக் மூலம் வேல்முருகன் தன்னை சீரழித்ததை மாணவி காவல்துறையில் கூறினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோவில் வழக்கு பதியப்பட்டு வேல்முருகன் கைதாகி இருக்கிறார்.

Also Read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!