மதுரையில் பைனான்சியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கூலிப்படையை ஏவி 2-வது மனைவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு நடராஜன் நகரைச் சேர்ந்தவர் பைனான்சியர் இளங்கோவன்(55). கடந்த வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். கொலை தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இளங்கோவனின் 2-வது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக 2-வது மனைவி அபிராமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தத்தநேரியை சேர்ந்த இளங்கோவனின் முதல் மனைவி இறந்து போன நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளங்கோவன் 4 ஆண்டுகளுக்கு முன் அபிராமியை 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அப்போது அபிராமியின் மூத்த மகள் அனுசுயாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அபிராமி கண்டித்துள்ளார். 

இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் அனுசுயாவை திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகும் இளங்கோவன், அனுசுயாவை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தயாரிடம் கண்ணீர் விட்டு அழுதபடியே கூறியுள்ளார். இனிமேலும் இளங்கோவனை உயிருடன் இருக்க விடக்கூடாது என்று கருதி அவரை கூலிப்படையை ஏவி கொன்றேன் என போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அபிராபி, அனுசுயா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய கூலிப்படை கும்பலை தேடி வருகின்றனர்.