நகைக்கடைக்காரிடம் நேக்காக ஆட்டைய போட்ட சீட்டிங் சாம்பியன்ஸ்! உங்களுக்கும் இப்படி நடக்காம பாத்துக்கோங்க!
டெல்லியைச் சேர்ந்த பழமை வாய்ந்த நகைக்கடை உரிமையாளர் தனது மொபைலில் வந்த போலியான தகவலை நம்பி லட்சக்கணக்கில் மதிப்புடைய தங்கத்தை இழந்துள்ளார். ஆனால், இது ஒரு சைபர் குற்றம் அல்ல என்கிறார்கள் நிபுணர்கள்!
அடுத்த முறை உங்கள் வங்கியில் இருந்து உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று மெசேஜ் வந்தால், வங்கியின் மொபைல் ஆப் அல்லது வலைத்தளம் மூலம் உங்கள் கணக்கைச் சரிபார்த்து, உண்மையாவே உங்கள் கணக்கில் ஏதும் தொகை செலுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
டெல்லி நகைக்கடைக்காரர் ஒருவர் ரொம்ப தாமதமாக தான் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறார். தனது வங்கியில் பணம் வரவு வைக்கப்பட்டதாக வந்த எஸ்.எம்.எஸ். தகவலைப் பார்த்துவிட்டு, மோசடி பேர்வழியின் கையில் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகளைப் பறிகொடுத்துவிட்டார்.
நகை வியாபாரி நேவல் கிஷோர் கண்டேல்வால், டெல்லியின் மிகப்பெரிய தங்கம் மற்றும் வெள்ளி சந்தையான சாந்தினி சௌக்கின் குச்சா மஹாஜானி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம், கிஷோர் அயோத்திக்குச் சென்றபோது, ஒரு நபர் தனது கடையை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடையில் தனது மகன்களுடன் 15 கிராம் தங்கச் சங்கிலி வாங்குவதாகப் பேசியுள்ளார்.
140 கோடி இந்தியர்களை வேவு பார்க்க இஸ்ரேல் கருவிகளை வாங்கும் மோடி அரசு!
ரக்ஷா பந்தன் நாளில் சிறுநீரகத்தை பரிசாக வழங்கிய பெண்! தம்பியின் உயிரைக் காப்பாற்றிய அன்புச் சகோதரி!
அந்த நபர், தன்னால் கடைக்குச் செல்ல முடியாது என்றும், வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்தால் ஆன்லைனில் பணத்தை க் கட்டுவதாவும் கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து, கிஷோரின் மொபைலில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.93,400 வரவு வைக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்திருக்கிறது. பின், செயின் வாங்குவதாகச் சொன்ன நபரும் பணம் செலுத்தப்பட்டதாக ஸ்கிரீன் ஷாட்டை கிஷோருக்கு அனுப்பியுள்ளார். கிஷோரும் அதைப் பார்த்துவிட்டு உடனே தன் மகன்களுக்கு ஃபார்வேடு செய்துள்ளார். அதற்குப் பின் அந்த நபர் கொடுத்த முகவரிக்கு தங்கச் சங்கிலி அனுப்பி வைக்கப்பட்டது.
மறுநாள் அதே நபர் போன் செய்து தனக்கு 30 கிராம் தங்க செயின் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக ரூ.1,95,400 டெபாசிட் செய்யப்பட்டதாக கிஷோரின் மொபைலுக்கு எஸ்எம்எஸ் வந்தது. மீண்டும் தங்கச் சங்கிலி அனுப்பப்பட்டது.
பிறகுதான் நகைக்கடைக்காரர் கிஷோர் மொபைலில் உள்ள வங்கி செயலியில் தனது கணக்கு விவரங்களைச் சரிபார்த்துள்ளார். அப்போது செயில் அனுப்பச் சொன்ன நபர் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்பதை உணர்ந்துள்ளார். உடனே தனக்கு வந்த இரண்டு எஸ்எம்எஸ்களையும் மீண்டும் ஒருமுறை பார்த்திருக்கிறார். அவை தனது வங்கி அனுப்பும் மெசேஜ் போலவே இருந்ததால், தான் ஏமாந்துவிட்டது அவருக்குப் புரிந்தது.
"நான் ஒரு நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தேன். இந்த ஏமாற்று வேலையை உணரவில்லை. எனது மகன்களை வங்கிக்குச் சென்று சரிபார்க்கச் சொன்னேன். அவர்கள் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். வங்கி அதிகாரிகள் தாங்கள் எந்தப் பொறுப்பும் ஏற்க இயலாது என்று கூறிவிட்டனர்" என்கிறார் பணத்தை இழந்த கிஷோர்.
அவரது மகன் மயங்க் கூறுகையில், கடையின் கணக்கு தொடர்பான வங்கி செயலி தனது தந்தையின் மொபைலில் மட்டுமே இருப்பதால், உடனடியாக சரிபார்க்க முடியவில்லை என்கிறார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் பதிவு செய்தும், இதுவரை மோசடி செய்தவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. பலரும் இது போன்ற மோசடிக்கு இரையாகி உள்ளனர்.
இது குறித்து புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் தலைவர் யோகேஷ் சிங்கால் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை எனக்கு இதுபற்றி தெரிந்ததும், இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறையினருக்கு செய்தி அனுப்பினேன். அப்போதுதான் பலரும் எனக்கு போன் செய்து தங்களுக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாகத் தெரிவித்தனர்" என்கிறார்.
உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் போர்ட்டலிலும் இந்த மோசடி பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மோசடி ஒரு சைபர் குற்ற வழக்காக நிற்காது என்று சட்ட வல்லுநர்கள் சொல்கின்றனர். ஆனால், வேறு எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
"இந்த மோசடி சைபர் சட்டத்தின் கீழ் வராது. யாரோ போலியாக ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். வங்கி இணையதளமோ அல்லது வேறு எந்த இணையதளமுமோ மோசடிக்கு பயன்படுத்தப்படவில்லை. எனவே இந்த வழக்கு சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் வராது. ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்" என்று சைபர் சட்ட நிபுணர் சஜல் தமிஜா சொல்கிறார்.
ஸ்மைல் பிளீஸ்! விக்ரம் லேண்டரை முதல் முறையாக படம் பிடித்த பிரக்யான் ரோவர்!
வாரத்துக்கு மூணு நாளாவது ஆபீசுக்கு வாங்க... அமேசான் சி.இ.ஓ. எச்சரிக்கையால் ஊழியர்கள் ஷாக்!