இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பெண்குயின்” திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிறைமாத கர்ப்பிணியாகவும், மகனை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் தாயாகவும் பல பரிணாமங்களில் கீர்த்தி சுரேஷ் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி “பெண்குயின்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. 22 நிமிடம் 33 விநாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரை இதுவரை 11 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். முன்பெல்லாம் பிரபல வார இதழ்கள், நாளிதழ்களில் மட்டுமே புதுப்பட திரைவிமர்சனங்களை காண முடியும். தற்போதைய இன்டர்நெட்  யுகத்தில் அந்த நிலை மாறி படத்திற்கு மட்டுமல்ல, டீசர், டிரெய்லருக்கு கூட விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

ஏகப்பட்ட யூ-டியூப் சேனல்கள் ஒரு படத்தை பலவகையில் பிரித்து மெய்ந்து விமர்சனங்களை முன்வைத்தாலும், சிலரது விமர்சனங்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கும். அப்படி இளம் கவிஞரும், வளரும் எழுத்தாளருமான அஸ்வின் என்பவர், “அசால்ட் ரிவ்யூ” என்ற தலைப்பில் “பெண்குயின்” பட டிரெய்லரை விமர்சித்துள்ள விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெறும் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய டிரெய்லரை வைத்தே படத்தின் காட்சி அமைப்புகள், கதாபாத்திர வடிவமைப்பு, கதை நகரும் கோணம், அதனுள் மறைந்திருக்கும் மர்மம் வரை அட்டகாசமாக விமர்சித்துள்ளார். 

விமர்சனம் என்ற பெயரில் தேவையில்லாத யூகங்கள், பொய் வர்ணனைகளை வைத்து, கோடிகளை செலவழித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை காலி செய்யும் நிகழ்வுகளை இயல்பாக காண முடியும். அப்படியிருக்க உள்ளதை உள்ளபடி விமர்சிக்கும் அஸ்வினின் விமர்சனத்தை கேட்கும் போது, படத்தை எப்போது திரையில் காண்போம் என்ற ஆர்வம் நமக்குள் தொற்றிக்கொள்கிறது. சமீபத்தில் வந்த த்ரில்லர் படங்களிலேயே முக்கியமான “ராட்சசன்” படத்தோடு ஒப்பிட்டு “பெண்குயின்” படத்தை விறுவிறுப்பாக விமர்சித்துள்ளார். 

வெறும் காட்சிகளை மட்டுமே விமர்சிக்காமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்திருப்பதால் கண்டிப்பாக மக்களுக்கு இது புதுவித விருந்தாக இருக்கும் என்பதை சிறப்பாக எடுத்துக்கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் நடிப்பு, லொக்கேஷன், கதைக்களம், ஒளிப்பதிவாளரின் கேமரா திறமை, புதுப்பட இயக்குநராகவே இருந்தாலும் த்ரில்லர் படத்தை துணிந்து அலசி ஆராய்ந்துள்ளார். பட விமர்சனம் குறித்த இவருடைய ‘பாசிட்டிவ் அப்ரோச்’ பிடித்து போய், ஜீவாவின் “சீறு” படக்குழுவினர் அஸ்வினை நேரில் சந்தித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. விமர்சனம் என்பது எதிர்மறையாக இருந்தால் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கும் என்ற பலரது எண்ணங்களை அஸ்வின் அழகாக உடைத்திருக்கிறார்.