Paidi Ramesh : சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர் ஒருவர் 4-வது மாடியில் இருந்து எதிர்பாராமல் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பைடி ரமேஷ். பல்வேறு முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ், கடந்த 2018-ம் ஆண்டு ‘ரூல்’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க முயற்சித்து வந்துள்ளார் ரமேஷ்.
ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அபார்ட்மெண்டில் வசித்து வந்த ரமேஷ், கடந்த வாரம் வியாழக்கிழமை, தனது துணிகளை துவைத்து காய வைத்துள்ளார். திடீரென்று மழை பெய்ய துவங்கியதால், துணியை எடுக்க விரைந்துள்ளார். அப்போது பலத்த காற்றும் வீசி உள்ளது.
இதில் ரமேஷின் துணி அருகில் இருந்த மின் கம்பியில் விழுந்துள்ளது. அதை எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ரமேஷ் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 37. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், இயக்குனர் ரமேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இயக்குனர் ரமேஷின் மரணம் தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது திடீர் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மயக்க மருந்து கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த புகார்.. கைதுக்கு அஞ்சி தலைமறைவான நடிகரை வலைவீசி தேடும் போலீஸ்
