Vijay Babu : நடிகர் விஜய் பாபு விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் பாபு. இவர் தயாரித்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் இவர் மீது சமீபத்தில் பாலியல் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து பலமுறை தன்னை பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அந்த நடிகை புகார் தெரிவித்திருந்தார்.
நடிகையின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை அடுத்து நடிகர் விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நடிகையின் புகாருக்கு பேஸ்புக் லைவில் மறுப்பு தெரிவித்த விஜய் பாபு, அதில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை பலமுறை பயன்படுத்தினார். இதன் காரணமாக நடிகர் விஜய் பாபு மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன.

அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் பாபு தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் துபாயில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபல நடிகையை காரில் கடத்தி வன்கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீப் சிக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள நடிகர் சங்கமான AMMA-வில் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த நடிகர் விஜய் பாபு, பாலியல் புகாரில் சிக்கியதை அடுத்து அந்த பதவியில் இருந்து அண்மையில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... டான்ஸால் டானுக்கு வந்த சோதனை... பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோவால் காப்பி சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்
