"தில் தோ ஹோப்பி ஹை ஜி" என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் செஜால் சர்மா. 25 வயதான இவர் அந்த சீரியல் ஹீரோவின் தங்கையாக நடித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட அந்த சீரியல் திடீரென ஆகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை மீரா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த செஜால், அவரது படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் செஜால் சர்மாவின் தோழிகளிடம் நடத்திய விசாரணையில்  தில் தோ ஹோப்பி ஹை ஜி சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டதால், செஜால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தொடர்ந்து வேறு சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடியதாகவும் கூறியுள்ளனர். 

செஜால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தனது முடிவுக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டதாலும், வேறு வாய்ப்பு கிடைக்காத மன அழுத்தத்தாலும் செஜால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருத்தப்படுகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த இளம் நடிகையான செஜால் சர்மாவின் தற்கொலை, சின்னத்திரை நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்போதும் க்யூட் ஸ்மைல் உடன் சுற்றி வந்த செஜால் சர்மா தற்கொலை செய்து கொண்டது தங்களது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சக நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.