- Home
- Cinema
- கருத்து
- Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Con City Movie Review : ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Con City Movie Review
பவர்ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள 'கான் சிட்டி', காமெடி மற்றும் ஸ்கேம் ஜானரை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள வித்தியாசமான திரைப்படமாக கவனம் ஈர்க்கிறது. ஏமாற்றுபவர்களை விட, எளிதில் ஏமாறுபவர்களே உண்மையான காரணம் என்ற கருத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது.
அர்ஜூன் தாஸ் மற்றும் அன்னா பென் தம்பதியர் மங்களூரை ஒட்டிய பகுதியில் சிறிய உணவகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு உதவியாளர்களாக இருக்கின்றனர். தம்பதியரின் மகன் அகிலனை தினமும் பள்ளிக்குச் சென்று அழைத்து வரும் பொறுப்பை அர்ஜூன் தாஸ் ஏற்றிருக்கிறார்.
ஒருநாள் பள்ளியில் இருந்து அகிலன் மர்மமாக கடத்தப்படுகிறார். இதற்குப் பின்னால் இருப்பவர் யார் என்பது தெரியவரும் தருணம் குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதன்பிறகு விரியும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியும், கடத்தலின் உண்மையான காரணமும் சுவாரஸ்யமாக வெளிப்படுகிறது.
Ananthan Kaadu Review: கம்பேக் கொடுத்தாரா ஆர்யா? 'அனந்தன் காடு' விமர்சனம் இதோ!
கான் சிட்டி விமர்சனம்
'சதுரங்க வேட்டை', 'லக்கி பாஸ்கர்', 'டாக்டர்' போன்ற புத்திசாலித்தனமான மோசடி கதைகளின் வரிசையில், இந்தப் படமும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது. கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்ட அர்ஜூன் தாஸ் மற்றும் அவரது குழுவின் நடவடிக்கைகள் பல இடங்களில் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டிய அர்ஜூன் தாஸ், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமைதியாக பேசும் அவரது கதாபாத்திரம், மிகப்பெரிய மோசடிகளை சாதாரணமாகச் செய்து முடிப்பது ரசிக்க வைக்கிறது. தர்க்கத்தை விட பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் படமாக 'கான் சிட்டி' அமைந்துள்ளது.
கான் சிட்டி ரிவ்யூ
மின்சார வாரிய அலுவலகத்தில் தொடங்கும் மோசடிகள் கிளைமாக்ஸ் வரை தொடர்ந்து செல்கின்றன. இன்றைய தொழில்நுட்ப உலகில் சில விஷயங்கள் எளிதில் கண்டுபிடிக்கப்படக்கூடியவை என்றாலும், அவற்றை நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தியிருப்பதால் ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரசிக்க முடிகிறது. குடும்பமே மோசடிகளை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பது படத்தின் தனிச்சிறப்பு. குறிப்பாக அன்னா பென் செய்யும் வாடகை மோசடி காட்சிகள் புதுமையாக அமைந்துள்ளன.
கான் சிட்டி படம் எப்படி இருக்கு?
அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றியிருப்பது இயக்குநரின் திறமையை வெளிப்படுத்துகிறது. விடிவி கணேஷ் மின்வாரிய அதிகாரியாக சிரிப்பை வாரி வழங்குகிறார். அருள்தாஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகச் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக வரும் நந்தகோபாலின் வில்லத்தனமான தோற்றமும் படத்திற்கு வலுசேர்க்கிறது. யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி இணையும் காட்சிகள் படத்தின் நகைச்சுவை பலத்தை அதிகரிக்கின்றன.
கான் சிட்டி படத்தின் ப்ளஸ் என்ன?
பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் நடுத்தர குடும்பம் எவ்வாறு மோசடிகளில் சிக்கிக்கொள்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றபடி அமைந்துள்ளன. சீரியஸான கதையையும் பொழுதுபோக்காக மாற்றும் திறனை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். மொத்தத்தில், லாஜிக் குறித்து அதிகம் யோசிக்காமல், புத்திசாலித்தனமான மோசடிகளும், குடும்ப நகைச்சுவையும் கலந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை ரசிக்க விரும்புபவர்களுக்கு 'கான் சிட்டி' ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

