கேஜிஎஃப் அத்தியாயம் 2 திரையிடப்பட்டபோது, தெரியாத நபர் ஒருவரால் இரண்டு முறை சுடப்பட்டதில் 27 வயது இளைஞன் காயமடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14-ம் தேதி நாடு முழுவதும் வெளியான 'கேஜிஎஃப் 2 த்தை ஹோம்பலே பிலிம்ஸ் பேனரின் கீழ் பிரசாந்த் நீல் எழுதி இயக்கியுள்ளார். மேலும் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். அதிக சண்டை காட்சிகளையும், வன்முறை சீன்களையும் கொண்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 'கேஜிஎஃப் 2' படம் பார்க்க வந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹாவேரியில் உள்ள ஒரு திரையரங்கில் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 திரையிடப்பட்டபோது, மர்ம நபர் ஒருவரால் இரண்டு முறை சுடப்பட்டதில் 27 வயது இளைஞன் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

முகலி கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஷிவாபூர் என்ற நபர் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தைப் பார்க்க தனது நண்பர்கள் குழுவுடன் தியேட்டருக்கு வந்துள்ளார். அப்போது வசந்தகுமார் தனது கால்களை முன் இருக்கையில் வைத்ததால் அங்கு அமர்ந்திருந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தியேட்டரை விட்டு அந்த நபர் வெளியேறியுள்ளார்.. பின்னர் மீண்டும் திரையரங்குக்குள் வந்த அந்த மர்ம நபர் வசந்தகுமாரை நோக்கி கைதுப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "காயமடைந்த நபருக்கு சுட்ட நபருடன் முன் விரோதம் இல்லை. கடந்த செவ்வாய்கிழமை, விவசாய வயல்களில் வேலை செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவர் நடிகர் யாஷின் தீவிர ரசிகராக இருந்ததால், தனது நண்பர்களுடன் இரவு காட்சிக்கு சென்றுள்ளார்.
பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தலைமறைவாகிவிட்டார், அவரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதோடு உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலும் சரிபார்க்கப்பட்டு வருகிறது என்று காவல்துறை கூறியுள்ளது. நேரில் பார்த்த சாட்சியின்படி, மூன்று சுற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவருக்கு வயிற்றில் காயம்பட்டது.. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
