தளபதி விஜய் 'சர்கார்' படத்தை தொடர்ந்து, தன்னுடைய 63 ஆவது படத்தை இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் மூலம் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் இணைய உள்ளார். 

ஏற்கனவே இவர்கள் இருவர், கூட்டணியில் வெளியான தெறி, மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்துள்ளதால், அடுத்த படத்திற்கும் மிக பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது இந்த படத்தில், நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில், சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இளம் ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில், பா.ரஞ்சித் தயாரித்திருந்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது. 

ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதிக்கு தம்பியாக நடித்திருந்த இவர், தற்போது விஜய் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.