சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, அவர் சிகரெட்டை பற்ற வைக்கும் ஸ்டைல் தான். ஆனால் தனது ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ரஜினியின் படங்களில் இப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை.

இதே போல தான் தளபதி விஜய்-ன் படங்களிலும், சமீபகாலங்களாக புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறாமல் இருந்தது. தற்போது ரிலீசாகி இருக்கும் சர்கார் படத்தின் ஃபஸ்ட் லுக்கில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த காட்சி அவரது ரசிகர்களையும் கூட வருத்தப்பட வைத்திருக்கிறது. மேலும் இந்த காட்சியினால் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார் விஜய்.

இந்த பிரச்சனை குறித்து பேசும் போது விஜய்க்கு ஆதரவாக பேசிய சிலர், விஜயை பற்றி மட்டும் கூறுகிறீர்களே, ரஜினியும் தான் காலா படத்தில் கள் குடிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது, அவரை மட்டும் யாரும் விமர்சிக்கவில்லையே ஏன்? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்திருக்கும் காலா படக்குழு, கள் என்பது போதை தரக்கூடிய செயற்கை பானம் கிடையாது. அது உணவின் ஒரு பகுதி. குளிர்ச்சிக்காக அருந்தப்படும் இயற்கை உணவுகளில் கள்ளும் அடங்கும். அதை இறக்குவதும், குடிப்பதும் அரசியல் அமைப்பு கொடுத்த சட்டம். அது மக்களுக்கான உணவு தேடும் உரிமையும் கூட. கள் விடுதலை கோரி கடந்த 10 ஆண்டுகளாக, சம்பந்தப்பட்ட மக்கள் போராடி வருகின்றனர்.

விஜய் புகைப்பிடித்திருக்கும் காட்சியை விமர்சிப்பது போல இதனைவிமர்சிக்க முடியாது. இந்த விஷயத்தில் ரஜினியை எதிர்த்து வாதம் செய்வது தவறு, என்றும் கூறி இருக்கின்றனர்.