முன்பின் யோசிக்காமல் சற்று உணர்ச்சி வசப்பட்டு ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் பெரும் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டு முழித்து வருகிறார் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு.

தமிழில் நகைச்சுவை நடிகர்களில் இப்போது தனக்குப் போட்டியே இல்லாமல்  முன்னணியில் இருப்பவர் யோகிபாபு. அவர் கதாநாயகனாக நடிக்கும் ’தர்மபிரபு’, ’ஜாம்பி’ ஆகிய படங்களோடு, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். 2019 தொடங்கி மூன்று மாதங்களே முடிவடையாத நிலையில் இதுவரை மட்டுமே சுமார் 20 படங்கள் வரை ஒப்பந்தமாகியிருக்கிறார் யோகி பாபு.

இந்த அளவுக்கு அதிகமான படங்களின் கால்ஷீட் பிரச்சினைகளை சமாளிக்க ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் இருந்தாலும் காலையில் ஒரு படப்பிடிப்பு, மாலையில் ஒரு படப்பிடிப்பு இரவில் மற்றொன்று என எல்லாப் படங்களுக்கும் போய்வந்துகொண்டிருக்கிறார். இதில் பல  நாயகர்களுக்கு சங்கடங்கள் இருந்தாலும் பொறுமைகாக்கவேண்டிய நிலை.

இந்நிலையில் ரஜினியின் வேண்டுகோளை ஏற்று ஏ. ஆர். முருகதாஸ் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் யோகிபாபு. படத்தில் ஒப்பந்தமாகும்போது ஷூட்டிங் ஸ்பாட்டை விசாரிக்காமல் ஒப்புக்கொண்ட யோகி பாபுவுக்கு தற்போது பெர்ம் சிக்கல் எழுந்துள்ளது.

ரஜினி, முருகதாஸ் படத்தின் முதல் ஷெட்யூல் ஏப்ரல் 10 முதல் துவங்கவிருப்பது மும்பையில். இதுவரை சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்ததால் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்கள் வரை பிரித்து கால்ஷீட் கொடுத்து வந்த யோகி பாபுவால் மும்பையிலிருந்து கொண்டு அவ்வாறு வரமுடியாது என்பதால் ஒரே நேரத்தில் ஏழெட்டு தயாரிப்பாளர்களை பகைத்துக்கொள்ளவேண்டிய நிலை.

ஒரு படத்துக்காக அத்தனை பேரை பகைத்துக்கொள்வது சரியாக இருக்காது என்பதால் ரஜினியை சந்தித்து தனது நிலையை விளக்கி படத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் யோகி பாபு.