அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தின் ஷூட்டிங் போர்ஷன்களை முடித்துவிட்டார் விஜய். டப்பிங்தான் போய்க் கொண்டிருக்கிறதாம். வழக்கமாக தனது புதிய படத்தின் அத்தனை பணிகளையும் முடித்துவிட்டுதான் அடுத்த புதிய படத்தினை பற்றிய செய்திகள் கசிய அனுமதிப்பார் விஜய். ஆனால் இந்த முறை பிகில் படத்தின் ஷூட்டிங் பாதி சென்று கொண்டிருந்த நிலையிலேயே தனது அடுத்த படத்தினை பற்றிய செய்திகள் சிறகடிக்க அனுமதித்தார். 


காரணம்? ரஜினி, அஜித் இருவரும் தங்களின் புதுப்படம் போய்க் கொண்டிருந்த நிலையிலேயே அடுத்த படங்களைப் பற்றி தகவல் கசிய விட்டதுதான். அதையே விஜய்யும் ஃபாலோ செய்தார். ஆம், பிகில் இயக்குநர் அட்லீயே டென்ஷனாகும் வண்ணம் தான் தனது புதிய  படத்தினை பற்றி பரபரக்க வைத்தார். இந்தப் படத்தை, புதுமுகங்களை வைத்து மாநகரம் எனும்  வெற்றிப் படத்தை கொடுத்து திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படம். கார்த்தியை வைத்து ‘கைதி’ எனும் படத்தை முடித்துவிட்டு, ரிலீஸுக்கு ரெடி செய்து கொண்டிருக்கும் கனகராஜ் அடுத்து விஜய்யை  வைத்து புதுப்படம் இயக்குகிறார். 


இந்த நிலையில் தளபதியின் இந்தப் படத்தை பற்றிய சில ஸ்கூப் தகவல்கள் உலா வர துவங்கியுள்ளன. அதாவது இந்தப் படமானது காலேஜ் பேக்கிரவுண்டில் நடக்கும் கதையாம். ஃபுல் லென்த் காமெடியும், அதில் பக்கா மெசேஜும் அடங்கியதாக இந்தப் படம் இருக்குமாம். 
காலேஜ் பேக்கிரவுண்ட் கதை இது! என்றதும் விஜய்யின் ரசிகர்களோ ‘அப்ப நண்பன் படத்துக்குப் பிறகு மறுபடியும் தளபதி காலேஜ் பையனாகுறார். அவரு என்னைக்குமே யுத்துதான்!’ என்று குதிக்கின்றனர். 


ஆனால்  யூனிட் சைடிலோ ‘அவரு ப்ரொஃபஷரா கூட இருக்கலாமே! தளபதி இப்பல்லாம் வயசுக்கு ஏத்த மாதிரிதான் படம் பண்றார்’ என்று கிசுகிசுக்கின்றனர். ப்ரொஃபஷரா இருந்தாலும் 30 வயசை தாண்டாதவராத்தானே காட்டுவீங்க பாஸு!