Will leave cinema if GST levied on movie tickets Kamalhasan
திரைப்படத்திற்கு 28% ஜிஎஸ்டி வரி தேவையில்லை, அப்படி ஜி.எஸ்.டி நடைமுறை படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாடு முழுக்க ஒரே மாதிரி வரி விதிப்பான ஜிஎஸ்டி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சினிமாவிற்கு 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும், என்ன தலைப்பாக இருந்தாலும், ஒரே மாதிரி 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதால் தமிழ் சினிமாவின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களுக்கிடையே அவர் பேசியதாவது; சினிமாவும் சூதாட்டமும் ஒன்றல்ல வேறு வேறு. சினிமா என்பது ஒரு கலை என்றும் தேச ஒற்றுமையை வரவேற்கிறோம் அதே நேரத்தில் தமிழ் சினிமாவை இந்தி சினிமாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஜிஎஸ்டி வரியை இந்தி சினிமா ஏற்றாலும் எங்களால் அதை ஏற்க முடியாது.
பிறந்தது முதல் சினிமாவில்தான் இருக்கிறேன். எனக்கு சினிமாதான் வாழ்க்கை. நான் பேசக்கற்றுக்கொண்டதே இந்த தமிழ் சினிமாவில்தான் ஜிஎஸ்டி 28 சதவிகிதம் அமல் படுத்தினால் சினிமாவை விட்டே விலகுவதை தவிர வேறு வழியில்லை என கூறினார்.
மேலும் ஜி.எஸ்.டி-யில் திரைப்பட டிக்கெட் கட்டணம் 28% நிர்ணயம் செய்து இருப்பது சரியல்ல, ஏராளமானோர் சினிமாவை நம்பி தான் உள்ளனர். ஜிஎஸ்டி வரியோடு நாங்கள் வருமான வரியும் கட்டவேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு விவகாரம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
