வர்மா படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது ஏன் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

 

வர்மா படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், வர்மா படத்தை கைவிடுவதாகம் மற்றொரு இயக்குநரை வைத்து மீண்டும் புதிதாக படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் பட நிறுவனம் கூறியுள்ளது. 

’’நாங்கள் எதிர்பார்த்தது போல வர்மா படத்தை பாலா இயக்கித் தரவில்லை என்று இ-4 தயாரிப்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று பட நிறுவனம் கேட்டதாகவும், பாலா அதற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. பட நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாலா படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து, படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.  

நடிகர் விக்ரம் முழு படத்தை பார்த்ததாகவும் சில காட்சிகளில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதால் படத்தை மீண்டும் இயக்க அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குநர் பாலாவை, நடிகர் விக்ரம் வெகுவாக பாராட்டியிருந்தார். தேசிய விருது பெற்ற இயக்குநரான பாலா இயக்கம் திருப்தி இல்லை எனக்கூறி படத்தை விட்டு இருப்பதும் பெருத்த அவமானமாக கருதப்படுகிறது. அதுவும் விக்ரம் மகன் துருவ் அறிமுகமான முதல் படத்திலேயே இத்தனை சிக்கல்களா? என திரையுலகினர் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.