இந்தியாவிலேயே மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீயாய் பரவும் கொரோனா தொற்றால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா ஆகியோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பயந்து தான் வசிங்கும் பங்களாவை பிளாஸ்டிக் கவர் கொண்டு முழுமையாக நடிகர் ஷாருக்கான் மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஷாருக்கானின் பிரம்மாண்ட வீடு பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டிருப்பது போன்ற போட்டோக்களும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. கொரோனா காற்று வழியாக பரவும் எனக்கூறப்பட்டதால் ஷாருக்கான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. 

ஆனால் உண்மையில் ஷாருக்கான் கொரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்காக அவ்வாறு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் ஷாருக்கான் இப்படிச் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு மும்பையில் பெய்யும் அதிகமான பருவமழையே காரணம். பலத்த காற்று, மழையிலிருந்து தனது சொகுசு பங்களாவை பாதுகாத்துக் கொள்ளவே ஷாருக்கான் வெளிப்புறங்களை இப்படி பிளாஸ்டிக் ஷீட் வைத்து மறைத்திருக்கிறார் என்பதே உண்மை எனத் தெரியவந்துள்ளது.