நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வீட்டின் தலைவரை தேர்வு செய்யுவதற்கான போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஜனனி ஐயர், மும்தாஜ், மஹத் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். சக போட்டியாளர்களை நேர்த்தியாக கன்வின்ஸ் செய்த, ஜனனி ஐயர் தான் கடைசியில் பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவருக்கு என சில பொறுப்புகளை கொடுத்தார் பிக் பாஸ் . அதன் படி பிக் பாஸ் வீட்டில் சமைக்க , பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தம் செய்ய என மூன்று வித அணியினரையும் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு, ஜனனியின் கைகளில் கொடுக்கப்பட்டது.

சமையல் வேலைகளுக்கு மும்தாஜ், நித்யா மற்றும் மஹத் ஆகிய மூவரையும் தேர்வு செய்தார் ஜனனி. அதன் பிறகு மஹத் வேண்டாம் அவருக்கு சமைக்க தெரியாது. என மும்தாஜ் கூறியதும் அவரை மாற்ற முயல்வதாக கூறினார் ஜனனி.

பாத்திரம் கழுவும் வேலையை செய்ய அனந்த் வைத்திய நாதன், ரித்விகா போன்றோரை தேர்வு செய்தார். கடைசியாக க்ளீனிங்க் டீம் என்று வரும் போது மிகவும் யோசித்து செண்ட்ராயனை தேர்வு செய்தார் ஜனனி. அங்கு எத்தனையோ பேர் இருக்கையில் ஜனனி எதனால் செண்ட்ராயனை தேர்வு செய்தார்? என்பது இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அவர் அடுத்ததாக டேனியலை இந்த வேலைக்கு அழைத்தார். கடைசியாக யாஷிகாவை, டேனியலே தான் மூன்றாவது நபராக தங்கள் க்ளீனிங் அணியில் சேர்த்து கொண்டார்.

குளியலறை கழிவறை போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டிய பணி இந்த கிளீனிங்க் டீமின் பொறுப்பு. இந்த வேலையை பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே சுழற்சி முறையில் செய்ய வேண்டி வரும் தான். ஆனால் ஜனனி க்ளீனிங்க் அணியை தேர்வு செய்கையில், அவரையும் அறியாமலேயே அவர் உள் இருக்கும் உளவியல் சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அங்கிருந்த வேறு யாரையும் இந்த பணிக்கு அழைக்கும் தைரியம் அவருக்கு வரவில்லை. அல்லது வேறு யாரிடமும் சொல்ல தயங்கி இருக்கிறார். அப்படி ஆனால் டேனியல் மற்றும் செண்ட்ராயன் மீது அந்த தயக்கம் வராதது ஏன்? இந்த கேள்வியை தான் இப்போது தீவிரமாக விமர்சித்து வருகின்றனர், சில முற்போக்கு சிந்தனைவாதிகள்.

பிக் பாஸ் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான். ஆனால் அது கற்றுக்கொடுக்கும் பாடங்கள், நாம் வாழும் உலகில், நம்மை சுற்றி நடக்கும் அன்றாட அரசியலையும், நமக்கு உணர்த்தும். என்பது பிக் பாஸுக்கு கூட தெரிந்திருக்க வய்ப்பில்லை.