ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி அதகளம் செய்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரை போலீஸ் கெட்டப்பில் பார்க்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பரோட்டா சூரி, பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. 

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "தலைவர் 169" என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், அதற்கு அடுத்து முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியில் கடைசி படமான அதை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக முதலில் தகவல்கள் பரவி வந்தது. அந்த படத்தை அவரது மருமகனும், பிரபல நடிகருமான தனுஷின் வெண்டர்பார் புரோடக்‌ஷன்  தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் "தலைவர் 169" படத்தை இயக்கும் வாய்ப்பு கெளதம் வாசுதேவ் மேனன் அல்லது லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரில் ஒருவருக்கும் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே "கைதி" படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தளபதி விஜய்யை வைத்து "மாஸ்டர்" என்ற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். 

இதற்கு முன்னதாக ரஜினியின் நட்சத்திர பிறந்தநாளின் போதும் லோகேஷ் கனகராஜ் அவரை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் பரவின. எனவே சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.